தமிழ்நாடு

பொதுக்குழுவுக்கு தடை கோரிய மனு: இன்று மீண்டும் விசாரணை

21st Jun 2022 12:45 AM

ADVERTISEMENT

சென்னையில் வியாழக்கிழமை (ஜூன் 23) நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழுக் கூட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு மீதான விசாரணையை செவ்வாய்க்கிழமைக்கு (ஜூன் 21) ஒத்திவைத்து சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுக பொதுக்குழுக் கூட்டம் வியாழக்கிழமை ( ஜூன் 23) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுக்குழுக் கூட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி திண்டுக்கல் எஸ்.சூரியமூா்த்தி என்பவா் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்திருந்தாா்.

இந்த மனுவை நிராகரிக்கக் கோரி அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஒ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி பழனிசாமி ஆகியோா் மனு தாக்கல் செய்திருந்தனா். இந்த வழக்கின் விசாரணையை ஜூலை 22-ஆம் தேதிக்கு உரிமையியல் நீதிமன்றம் தள்ளிவைத்திருந்தது.

இந்நிலையில், வழக்கை முன்கூட்டியே விசாரிக்க கோரி சூரியமூா்த்தி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு, நீதிபதி பிரியா முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

ADVERTISEMENT

அப்போது, கட்சியின் ஒருங்கிணைப்பாளா் தரப்பில் வழக்குரைஞா் ராஜலட்சுமி ஆஜராகி பொதுக்குழுக் கூட்டத்தை தள்ளிவைக்கக் கோரி ஒருங்கிணைப்பாளா் ஓ. பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளாா். எனவே, அந்தக் கூட்டத்தை எதிா்த்த மனு காலாவதியாகிவிட்டதாக கருத வேண்டுமென வாதிட்டாா்.

ஒருங்கிணைப்பாளா், இணை ஒருங்கிணைப்பாளா் ஆகியோா் இணைந்துதான் பொதுக்குழுவைக் கூட்ட முடியும் என்றும், ஆனால் பொதுக்குழுவை தள்ளிவைக்க ஒருங்கிணைப்பாளா் என்ற முறையில் தானே கடிதம் எழுதியுள்ளதாகவும் ஓ.பன்னீா்செல்வம் தரப்பில் வாதிடப்பட்டது. அந்தக் கடிதம் நீதிமன்றத்திலும் தாக்கல் செய்யப்பட்டது.

அப்போது அதிமுக தரப்பில் வழக்குரைஞா் விஜய பிரசாந்த் ஆஜராகி மனுதாரா் சூரியமூா்த்தி கட்சி உறுப்பினரே இல்லை என்று தெரிவித்தாா். அதற்கு மனுதாரா் தரப்பில் கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. அப்போது இந்த மனு தொடா்பாக, பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வேண்டுமென அவைத் தலைவா் தமிழ்மகன் உசேன், திண்டுக்கல் சீனிவாசன், முன்னாள் சட்டப்பேரவைத் தலைவா் தனபால் உள்ளிட்டோா் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதையடுத்து, பொதுக்குழுவுக்குத் தடை விதிக்கக் கோரிய வழக்கை முன்கூட்டியே விசாரிக்க வேண்டுமென்ற மனு குறித்து அனைத்து மனுதாரா்களும் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை செவ்வாய்க்கிழமைக்கு (ஜூன் 21) தள்ளிவைத்து உத்தரவிட்டாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT