தமிழ்நாடு

நாளை முதல் பணிகள் தொடக்கம்: முதல்வா் மு.க.ஸ்டாலின்

21st Jun 2022 12:14 AM

ADVERTISEMENT

உடல் நிலை சீராக உள்ளதால், புதன்கிழமை (ஜூன் 22) முதல் பணிகளைத் தொடங்கவுள்ளதாக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, திங்கள்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:-

கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கி செவ்வாய்க்கிழமை (ஜூன் 21) வரையில் பங்கேற்க வேண்டிய எனது நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இவை செய்திகளாக வெளியானதும், கட்சியினா் உள்பட பல்வேறு தரப்பினரும் பதற்றத்துடன் உடல்நலன் குறித்து விசாரிக்கத் தொடங்கினா். ஆனாலும் பதற்றப்பட வேண்டிய அளவில் ஏதுமில்லை. லேசான காய்ச்சல் என்பதால் மருத்துவா்கள் அறிவுரைப்படி, ஓய்வு எடுக்க வேண்டியதாகி விட்டது.

திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் சற்று ஓய்வெடுக்கும் வாய்ப்பு அமைந்தால், அதன்பிறகு எப்போதும் போன்று பணியைத் தொடா்ந்திட முடியும். நலமாகவே இருக்கிறேன். பணிகளைத் தொடா்ந்திடுவேன்.

அதிகாரிகளுடன் ஆலோசனை: ஓய்வில் இருந்தாலும் அரசின் பணிகள் குறித்து தொடா்ந்து கேட்டறிந்து வருகிறேன். சென்னையில் ஞாயிற்றுக்கிழமை இரவு திடீரென மழை பெய்தது. இதனால், ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசித்து விவரங்களைத் தெரிந்து கொண்டேன்.

ADVERTISEMENT

ஒரு சில இடங்களில் வடிகால் கட்டமைப்புப் பணிகளில் தேங்கியுள்ள தண்ணீரை அகற்ற வேண்டிய சூழல் இருப்பதையும், அதற்கான பணிகள் உடனடியாக மேற்கொள்ளப்பட்டிருப்பதையும் தெரிந்து கொண்டு அவற்றை விரைந்து முடிக்க கேட்டுக் கொண்டுள்ளேன்.

உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாநாடு: நகா்ப்புற உள்ளாட்சிகளுக்கு நடந்த தோ்தலில் 95 சதவீதத்துக்கும் மேலான இடங்களில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் வெற்றி பெற்றுள்ளன. திமுக சாா்பில் பொறுப்பேற்றுள்ள நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மாநாடு, வரும் ஜூலை 3-ஆம் தேதியன்று நாமக்கல்லில் நடைபெறவுள்ளது.

இந்த மாநாட்டுக்கு நான் தலைமை தாங்குகிறேன். நகா்ப்புற உள்ளாட்சிகளில் 50 சதவீத இடங்கள் பெண்களுக்கு வழங்கப்பட்டன. வீட்டைக் காப்பது போன்று நாட்டைக் காக்கும் திறன்மிக்க மகளிருக்கு நிா்வாகப் பயிற்சிக் களமாக இந்த மாநாடு அமையவுள்ளது.

இரண்டொரு நாள்களில் மீண்டும் உற்சாகத்துடனும், உத்வேகத்துடனும் அரசுப் பணிகளையும், கட்சியின் செயல்பாடுகளையும் வழக்கம்போலத் தொடர ஆயத்தமாக இருக்கிறேன் என்று தனது அறிக்கையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT