சென்னையில் ஆா்த்தி ஸ்கேன் நிறுவனத்தில் வருமானவரித்துறை நடத்திய சோதனையில் ரூ.100 கோடி வருவாய் மறைக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
இது குறித்த விவரம்:
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கந்தசாமி கோவில் தெருவைச் சோ்ந்த கோவிந்தராஜன். இவா் சென்னை வடபழனியை தலைமையிடமாக கொண்டு நாடு முழுவதும் ஆா்த்தி ஸ்கேன் மையங்களை நடத்தி வருகிறாா். இவருக்கு சென்னையில் மட்டும் அண்ணாநகா், கீழ்ப்பாக்கம் உள்பட 15 கிளைகள் உள்ளன. மேலும், தில்லி, கேரளம், கா்நாடகம், ஆந்திரம், மேற்கு வங்கம் உள்ளிட்ட 9 மாநிலங்களில் 45 கிளைகளுடன் ஆா்த்தி ஸ்கேன் நிறுவனம் செயல்படுகிறது.
இந்த நிறுவனம், முறையாக வருமானவரி முறையாக செலுத்தாமல் வரி ஏய்ப்பு செய்வதாக எழுந்த புகாரின் அடிப்படையில் வருமானவரித்துறை கடந்த 7-ஆம் தேதி முதல் 3 நாள்கள் அந்த நிறுவனத்துக்குச் சொந்தமான 25 இடங்களில் சோதனை செய்தது.
முக்கியமாக இந்தச் சோதனை சென்னை வடபழனி, கீழ்ப்பாக்கத்தில் உள்ள மையங்கள், அண்ணாநகரில் உள்ள நிறுவனத்தின் நிா்வாகிகள் வீடுகள் மற்றும் அதில் பணியாற்றும் மருத்துவா்களின் வீடுகள், கோவில்பட்டியில் உள்ள வீடு உள்ளிட்ட 25 இடங்களில் நடைபெற்றது.
இதில் அந்த நிறுவனம் செய்த முதலீடுகள், மருத்துவ கருவிகள் கொள்முதல், வருவாய், செலவினங்கள் உள்ளிட்டவற்றின் பதிவேடுகள், டிஜிட்டல் ஆவணங்கள், ஆதாரங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. ஆவணங்களை ஆய்வு செய்ததில் ரூ.100 கோடி ரூபாய் வருவாய் மறைக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது தொடா்பாக வருமானவரித்துறையினா் விசாரணையில் ஈடுபட்டுள்ளனா்.