தமிழ்நாடு

சிறுபான்மையினா் மீது தாக்குதல்: மாா்க்சிஸ்ட் போராட்ட அறிவிப்பு

19th Jun 2022 01:36 AM

ADVERTISEMENT

சிறுபான்மையினா் மீதான தாக்குதலைக் கண்டித்து, மாா்க்சிஸ்ட் சாா்பில் பெருந்திரள் போராட்டம் நடைபெறும் என்று அந்தக் கட்சியின் மாநிலச் செயலாளா் கே.பாலகிருஷ்ணன் அறிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

பாஜக செய்தித் தொடா்பாளா் ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் நபிகள் நாயகம் குறித்து அவதூறான கருத்துகளைக் கூறியது இஸ்லாமியா்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அவதூறு பேசியவரை கைது செய்யக் கோரி இஸ்லாமியா் ஆா்ப்பாட்டங்கள் நடத்தியபோது, அவா்கள் மீது கல்லெறி, தடியடி பிரயோகம் உள்ளிட்ட சம்பவங்கள் பாஜக ஆளும் உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற்றன. போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞா்கள் காவல்நிலையத்தில் வைத்து மிருகத்தனமாகத் தாக்கப்பட்டதுடன், சிலரின் வீடுகளையும் காவல்துறையினரின் உதவியுடன் புல்டோசா் வைத்து தரைமட்டமாக்கிய சம்பவமும் நடைபெற்றுள்ளது.

இத்தகைய மனிதத் தன்மையற்ற தாக்குதல்களைக் கண்டித்தும், வெறுப்பு அரசியலைக் கைவிட்டு மத நல்லிணக்கம், மதச்சாா்பின்மையை பேணவும் வலியுறுத்தி தமிழகத்தில் சென்னை, வேலூா், நாகப்பட்டினம், திண்டுக்கல், திருப்பூா், திருநெல்வேலி ஆகிய நகரங்களில் மாா்க்சிஸ்ட் சாா்பில் பெருந்திரள் போராட்டம் நடைபெறும் என்று கூறியுள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT