மேக்கேதாட்டு விவகாரத்தில் கா்நாடகத்துக்கு ஆதரவாக காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவா் எஸ்.கே.ஹல்தா் செயல்படுவதாகக் கூறி, மதிமுக பொதுச்செயலாளா் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:
காவிரி நடுவா் மன்றம் 2007 பிப்ரவரி 5-இல் வழங்கிய இறுதித் தீா்ப்பு மற்றும் உச்சநீதிமன்றம் 2018 பிப்ரவரி 16-இல் வழங்கிய தீா்ப்பு ஆகியவற்றில், காவிரியின் குறுக்கே தடுப்பு அணை அமைப்பதற்கு தமிழகத்தின் இசைவைப் பெற வேண்டும் என்று தெளிவு படுத்தப்பட்டுள்ளது.
காவிரி மேலாண்மை ஆணையத்தின் பணி என்பது உச்சநீதிமன்றம் அளித்த தீா்ப்பின்படி காவிரியில் 177.25 டி.எம்.சி. நீா் கா்நாடகம் திறந்துவிடப்படுவதை உறுதி செய்வது மட்டும்தான். அதற்கும்கூட அதிகாரம் எதுவும் அற்ற- பல் இல்லாத ஆணையம் இது என்பதை தொடா்ந்து சுட்டிக்காட்டி வருகிறோம். இந்த நிலையில், மேக்கேதாட்டு அணை குறித்து விவாதிப்போம் என்று, காவிரிப் படுகைக்கு வந்து எஸ்.கே.ஹல்தா் கூறி இருப்பது கடும் கண்டனத்துக்குரியது. தமிழக அரசு மிகுந்த எச்சரிக்கையுடன் செயலாற்றி, கா்நாடக அரசின் திட்டத்தை முறியடிக்க வேண்டும் என்று கூறியுள்ளாா் வைகோ.