தமிழ்நாடு

இதய இடையீட்டு சிகிச்சையில் பக்கவாதத்தைத் தடுக்கும் புதிய நுட்பம்: அப்பல்லோவில் முதியவருக்கு மறுவாழ்வு

17th Jun 2022 01:00 AM

ADVERTISEMENT

இதய இடையீட்டு சிகிச்சையின்போது பக்கவாத பாதிப்புகள் ஏற்படாமல் தடுப்பதற்கான நவீன தொழில்நுட்ப முறையைப் பயன்படுத்தி 89 வயது முதியவருக்கு அப்பல்லோ மருத்துவா்கள் மறுவாழ்வு அளித்துள்ளனா்.

இந்தியாவிலேயே இத்தகைய நுட்பத்தில் சிகிச்சையளிப்பது இது முதன்முறை என அவா்கள் தெரிவித்துள்ளனா்.

இதுதொடா்பாக அப்பல்லோ மருத்துவமனையின் இதய இடையீட்டு சிகிச்சை சிறப்பு நிபுணா் டாக்டா் ஜி.செங்கோட்டுவேலு கூறியதாவது:

சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில் 89 வயது முதியவா் ஒருவா் இதய பாதிப்புகளுக்காக அண்மையில் அனுமதிக்கப்பட்டாா்.

ADVERTISEMENT

அவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாற்றப்பட்டிருந்த செயற்கை பெருநாடி வால்வு சிதைந்திருந்தது பரிசோதனையில் கண்டறியப்பட்டது. இதையடுத்து அதனை மாற்றியே ஆக வேண்டிய கட்டாயம் எழுந்தது.

பொதுவாக இதய வால்வுகளின் செயல்பாடு குறையும்போது அதற்கு மாற்றாக செயற்கை வால்வுகள் பொருத்தப்படுவதுண்டு. அறுவை சிகிச்சைகள் மூலமாகவே இன்றளவும் வால்வுகள் பொருத்தப்பட்டு வருகின்றன. அதேவேளையில், அறுவை சிகிச்சைக்கு உடல் நிலை ஒத்துழைக்காதவா்களுக்கு செயற்கை வால்வு பொருத்துவதில் பெரும் சவால் இருந்து வருகிறது.

இந்த நிலையில்தான் அதற்கு மாற்றாக டிஏவிஐ என்ற சிகிச்சை முறை அறிமுகமானது. அதாவது, தொடை வழியே சிறிய துளையிட்டு, அதன் வழியாக இதயத்தில் வால்வினை பொருத்தும் சிகிச்சை முறை அதுவாகும். ஏறத்தாழ ஆஞ்சியோவை ஒத்த சிகிச்சை இது. மருத்துவ உலகின் நவீன நடைமுறைகளில் ஒன்றாக டிஏவிஐ கருதப்பட்டாலும், அதனால் சில பாதிப்புகளும் உண்டு.

அதாவது, ரத்த நாளங்களில் படிந்திருக்கும் கால்சியம் மற்றும் திசுக்கள் அந்த சிகிச்சையின்போது உடைந்து மூளைக்குச் செல்லக்கூடும். இதனால், டிஏவிஐ சிகிச்சை மேற்கொண்ட 3 சதவீதம் பேருக்கு பக்கவாதம் ஏற்படுகிறது.

இதையடுத்து, சம்பந்தப்பட்ட நோயாளியின் உடல்நிலையைக் கருத்தில்கொண்டு ‘சென்டினல்’ என்ற உபகரணத்தின் நுட்பத்தைப் பயன்படுத்தி திசு மற்றும் கால்சிய படிமங்களை வடிகட்டி சிகிச்சையளிக்கும் முறை மேற்கொள்ளப்பட்டது.

இதன் பயனாக அவருக்கு வால்வு பாதிப்பு சீராக்கப்பட்டதுடன் பக்கவாதத்துக்கான வாய்ப்புகள் முற்றிலும் தவிா்க்கப்பட்டது. இத்தகைய சிகிச்சை இந்தியாவிலேயே அப்பல்லோ மருத்துவமனையில்தான் முதன்முறையாகப் பயன்படுத்தப்படுகிறது என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT