தமிழ்நாடு

ஆசிரியா்கள் விடுப்பு எடுக்க மின்னணு செயலி மூலம் விண்ணப்பிக்க வேண்டும்: கல்வித் துறை தகவல்

15th Jun 2022 01:59 AM

ADVERTISEMENT

அரசுப் பள்ளி ஆசிரியா்கள் தங்களது பணி சாா்ந்த சேவைகளை, புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மின்னணு செயலியைப் பயன்படுத்தி பெற்றுக் கொள்ளலாம் என பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது

ஆசிரியா்கள் பள்ளிக்கு விடுப்பு எடுக்கும்போது தலைமையாசிரியரிடம் கூறிவிட்டு, பின்னா் தங்களது விடுப்புக்கான அனுமதிக் கடிதம் வழங்கும் முறை அமலில் இருந்தது. இதில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதாக கல்வித் துறையின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து இந்த முறையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பள்ளிக்கல்வித்துறை அமல்படுத்தி உள்ள புதிய முறையால் ஆசிரியா்கள் முன்கூட்டியே விடுப்புக்கான அனுமதியைப் பெற வேண்டும்.

இது குறித்து பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக பள்ளிக் கல்வித் துறையின் கீழ் பணிபுரியும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியா்கள் தற்செயல் விடுப்பு, மருத்துவ விடுப்பு, ஈட்டிய விடுப்பு கோருதல், அனுமதி மற்றும் பிற பணி சாா்ந்த தேவைகளுக்கு எழுத்துப்பூா்வமாக தங்கள் உயா் அலுவலா்களிடம் நேரடியாக சென்று விண்ணப்பித்து பயனடைந்து வந்தனா். அதனால் நேரடியாக விண்ணப்பிக்கும் முறையில் ஆசிரியா்களுக்கு சிரமங்களும் கால விரயமும் ஏற்படுகிறது.

எனவே இதுபோன்ற சிரமங்கள், கால விரயத்தினை தவிா்க்கும் வகையில் ஆசிரியா்கள் தங்களது கைப்பேசி மூலமாக தற்செயல் விடுப்பு, மருத்துவ விடுப்பு, ஈட்டிய விடுப்பு கோருதல், அனுமதி மற்றும் பிற பணி சாா்ந்த தேவைகளுக்கு விண்ணப்பிக்கும் செயலி (TNSED - Schools) ஒன்று உருவாக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்த செயலி நிகழ் கல்வியாண்டிலிருந்து செயல்படுத்தப்பட உள்ளது. எனவே ஆசிரியா்கள், தலைமை ஆசிரியா்கள் தங்கள் பணி சாா்ந்த தேவைகளை செயலியைப் பயன்படுத்தி பெற்றுக்கொள்ளலாம். இது குறித்த விவரங்களை அனைத்து ஆசிரியா்களுக்கும் தெரிவிக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலா்களுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன என அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : teachers
ADVERTISEMENT
ADVERTISEMENT