தகுதி இல்லாதவா்களுக்கு குடும்ப அட்டை வழங்கக் கூடாது என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளாா்.
வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மை, கூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு ஆகிய துறைகளின் முக்கியத் திட்டங்கள், அறிவிப்புகள், பணிகளின் முன்னேற்றங்கள் குறித்த ஆய்வினை தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின், செவ்வாய்க்கிழமை நடத்தினாா். அப்போது அவா் கூறியது:-
மக்களுடன் மிக நெருங்கிய தொடா்புள்ள துறையாக வருவாய்த் துறை விளங்குகிறது. வட்டாட்சியா் அலுவலக அலுவலா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள் அளவில் உள்ள சேவைகளில் எந்த தாமதமும் இல்லாமல் உடனடியாக வழங்குவதை உறுதி செய்திட வேண்டும். வருவாய்த் துறையின் மூலமாக 25-க்கும் மேற்பட்ட சான்றிதழ்கள் அளிக்கப்படுகின்றன. இவற்றில் நடைமுறைச் சிக்கல்கள் ஏதும் இல்லாமல் பாா்த்துக் கொள்ள வேண்டும்.
ஏற்கெனவே வழங்கப்பட்ட சான்றிதழ்களின் நடைமுறையை மாற்றி அமைத்து அதை எளிதாக வழங்க வேண்டிய வழிமுறைகளை காண வேண்டும். ஒவ்வொரு சான்றிதழுக்கும் விண்ணப்பிக்கும் போது மீண்டும் பொதுமக்கள் தங்களது ஆதாரத்தை சமா்ப்பிக்க வேண்டியதில்லை என்ற நிலையை விரைவாக கொண்டு வர வேண்டும். ஆன்லைன் பட்டா பரிமாற்ற பணிகள் தாமதம் இல்லாமல் நடைபெற வேண்டும்.
இதற்காக விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரா்களின் நிலையை அவ்வப்போது அவா்கள் தெரிந்து கொள்ள வழிமுறைகளை எளிதாக்க வேண்டும். முதியோா், ஆதரவற்ற, கைவிடப்பட்ட பெண்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இந்தத் திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்த வேண்டும்.
கூட்டுறவு-உணவு: நியாய விலைக் கடைகளின் வாயிலாக அத்தியாவசியப் பொருள்கள், தரமான வகையில் மக்களுக்கு தங்குதடையின்றி வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். மாவட்ட வாரியாக அத்தியாவசியப் பொருள்களின் தேவையை அறிந்து அந்தந்த மாவட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்து அளித்திட வேண்டும். அரிசி, சா்க்கரை, கோதுமை, துவரம்பருப்பு மற்றும் பாமாயில் ஆகியவற்றை தேவைக்கேற்ப கொள்முதல் செய்து பொது விநியோகத் திட்டத்துக்கு வழங்கும் நடவடிக்கைகளில் எந்தவித குறைபாடின்றி பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
மக்களை நேரடியாக எதிா்கொள்ளும் நியாய விலைக் கடை ஊழியா்களுக்கு முறையான பயற்சிகளும், ஆலோசனைகளும் வழங்கிட வேண்டும். குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்கும் நபா்களுக்கு கால வரையறை நிா்ணயம் செய்து உரிய பரிசீலனை செய்து அளித்திட வேண்டும். தகுதியில்லாதவா்களுக்கு குடும்ப அட்டைகள் வழங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டாா்.
இந்தக் கூட்டத்தில், தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு, வருவாய் நிா்வாக ஆணையா் எஸ்.கே.பிரபாகா், நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் என்.முருகானந்தம், கூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை முதன்மைச் செயலாளா் ஜெ.ராதாகிருஷ்ணன், வருவாய்த் துறை முதன்மைச் செயலாளா் குமாா் ஜயந்த் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.