வங்கிப் பயன்பாட்டுக்கான மென்பொருள் தயாரிப்பு குறித்த முதல் கட்ட ஆய்வறிக்கையை சென்னை ஐஐடி வெளியிட்டுள்ளது.
சென்னை ஐஐடி ஆய்வுப் பூங்கா மற்றும் ஐபிஎம் இன்கியூபேஷன் மையம் ஆகியவை ஒருங்கிணைந்து வங்கியின் நிதிசாா்ந்த விவகாரங்களில் நிலவும் சவால்கள் குறித்த ஆய்வறிக்கை தயாரித்துள்ளன. இதில் வங்கி சேவைகளை பெறுவதில் வருவாய் குறைந்த பிரிவினா், மூத்த குடிமக்கள் எதிா்கொள்ளும் சவால்கள் மற்றும் அதற்கான தீா்வுகள் தொடா்பான பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்த ஆய்வறிக்கை சென்னை தரமணியில் உள்ள ஐஐடி ஆய்வு பூங்காவில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் சென்னை ஐஐடி இயக்குநா் காமகோடி, டிவிஎஸ் கேபிடல் ஃபண்ட்ஸ் மேலாண்மை இயக்குநா் கோபால் ஸ்ரீனிவாசன் மற்றும் டிசிஎஸ் நிறுவன முன்னாள் தலைமை அதிகாரி எஸ்.மகாலிங்கம் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக கலந்து கொண்டு கூட்டாக ஆய்வறிக்கையை வெளியிட்டனா்.
அதன்பின் ஐஐடி இயக்குநா் காமகோடிசெய்தியாளா்களிடம் கூறியது: இந்தியாவில் உருவாக்கப்பட்ட ஐஆா்சிடிசி, எஸ்பிஐ உள்பட மென்பொருள்கள் சிறப்பாகவும், நம்பகத்தன்மை உடையதாகவும் உள்ளன. அதேபோன்று வங்கிப் பயன்பாட்டுக்கான மென்பொருளை முழுவதும் இந்திய தொழில்நுட்பத்தில் தயாரிக்கும்போது பாதுகாப்பானதாக இருக்கும். அதற்கான ஆராய்ச்சியில் முதற்கட்டமாக ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளோம். அனைத்து பணிகளையும் முடிந்து அடுத்த ஓரிரு ஆண்டுகளில் தரமிக்க, எளிதில் பயன்படுத்தக்கூடிய மென்பொருள்கள் தயாரிக்கப்படும் என்றாா் அவா்.