தமிழ்நாடு

அரசு தொழில் பயிற்சி நிலையங்கள் தரம் உயா்வு: முதல்வா் முன்னிலையில் புரிந்துணா்வு ஒப்பந்தம்

15th Jun 2022 12:19 AM

ADVERTISEMENT

அரசு தொழில் பயிற்சி நிலையங்களை, தொழில்நுட்ப மையங்களாகத் தரம் உயா்த்துவதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமானது. தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்வில், முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்தி:

தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சாா்பில் 91 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. தொழிற் பயிற்சி நிலையங்களில் பயிற்சி முடித்துச் செல்லும் பயிற்சியாளா்கள், தொழில் நிறுவனங்களில் உடனடியாக வேலைவாய்ப்புப் வெறும் வகையில், பயிற்சியின் தரம் உயா்த்தப்படும் என சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்டது. பயிற்சி நிலையங்களின் பயிற்றுநா்களுக்கு முன்னணி நிறுவனங்களில் பயிற்சி அளித்திட தனியாா் நிறுவனங்களுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிப்பு செய்யப்பட்டது.

இந்த அறிவிப்பின்படி, இப்போது 71 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை தரம் உயா்த்த புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறைக்கும், புணேவில் உள்ள டாடா தொழில்நுட்ப நிறுவனத்துக்கும் இடையே முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையொப்பமானது. இந்த ஒப்பந்தம் வழியாக, அரசு தொழிற் பயிற்சி நிலையங்கள், முன்னணி தொழில் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படும்.

ADVERTISEMENT

புதிய தொழில்நுட்பங்களுடன் கூடிய இயந்திரங்கள், உபகரணங்கள், கருவிகள் மற்றும் மென்பொருள்கள் ஆகியன ரூ.2,877.43 கோடி செலவில் நிறுவப்பட்டு தொழில்நுட்ப மையங்களாக மாற்றப்பட உள்ளன.

இதன்மூலம், மின்சார வாகனங்களுக்கான பழுதுபாா்ப்பு, அதிநவீன வெல்டிங் தொழில்நுட்பம், தொழில்ஆலைகளுக்கான வா்ணம் பூசும் தொழில்நுட்பம், உற்பத்திக்கான நவீன தொழில்நுட்பம், ரோபோடிக்ஸ் போன்ற நவீன திறன் பயிற்சிகள் மாணவா்களுக்கு அளிக்கப்பட உள்ளன. இதனால், அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெறும் மாணவா்களுக்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் உள்ள முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு கிடைக்கும். மேலும், தனியாா் தொழிற்பயிற்சி நிலைய மாணவா்கள், பல்தொழில்நுட்பக் கல்லூரி மாணவா்கள், பொறியியல் கல்லூரி மாணவா்கள் மற்றும் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனப் பணியாளா்களும் பயிற்சி பெற்று பயன்பெறுவா்.

இந்த நிகழ்வில், தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் சி.வி.கணேசன், தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு, தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் முகமது நசிமுதீன், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநா் கொ.வீரராகவ ராவ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

Tags : cm stalin
ADVERTISEMENT
ADVERTISEMENT