தமிழ்நாடு

காரைக்குடி அருகே அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயில் தேரோட்டம்

14th Jun 2022 07:14 PM

ADVERTISEMENT

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே தென் திருப்பதி என்றழைக்கப்படும் அரியக்குடி அருள்மிகு திருவேங்கடமுடையான் கோயில் வைகாசிப் பெருந்திருவிழாவையொட்டி செவ்வாய்க்கிழமை மாலையில் தேரோட்டம் நடைபெற்றது.

தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தில் உள்ள இக்கோயில் செட்டிநாடு பகுதியில் உள்ள பிரசித்த பெற்ற வைணவ ஸ்தலமாகும்.

இங்கு ஆண்டுதோறும் வைகாசி பெருந்திருந் திருவிழா 15 நாள்கள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு விழா கடந்த ஜூன் 6-ந்தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. அன்று முதல் தினந்தோறும் சுவாமி வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதியுலா நடைபெற்றது. நேற்று (திங்கள்கிழமை) இரவு தங்கக் குதிரைவாகனத்தில் எழுந்தருளி சுவாமி திருவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி தந்தார்.

ADVERTISEMENT

முக்கிய விழாவான 9 ஆம் நாள் தேரோட்டம் இன்று (செவ்வாய்க் கிழமை) மாலையில் நடைபெற்றது. முன்னதாக காலையில் ஸ்ரீதேவி, ஸ்ரீ பூதேவியுடன் திருவேங்கடமுடையான் சிறப்பு அலங்காரத்துடன் திருத் தேரில் எழுந்தருளினார். அதைத்தொடர்ந்து பக்தர்கள் அர்ச்சனை செய்து வழிபட்டனர்.

மாலையில் நாட்டார்கள் பழங்கள், மலர்கள் தட்டுகளுடன் ஊர்வலமாக வந்து சுவாமி தரிசனம் செய்தனர். ஊர்வலத்தின் முன்பாக நாட்டிய குதிரைகள் நடனம், செண்டை மேளம், கெட்டிமேளம் முழங்க தேர்நிலைக்கு வந்தனர். அதனை தொடர்ந்து மாலை 4.45 மணியளவில் நாட்டார்கள், பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து தேரோட்டம் தொடங்கி தேரோடும் வீதிகள் வழியாக வலம் வந்து மீண்டும் தேர் நிலையை அடைந்தது.

வரும் வெள்ளிக்கிழமை (ஜூன் 17) அலங்கார பங்களா தெப்பத் திருவிழா நடைபெறும். தொடந்து ஜூன் 20-ந் தேதி வரை திருவிழா நடைபெறுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT