தமிழ்நாடு

இடைநில்லா கல்வி இலக்கை நோக்கி பயணிப்போம்: அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வலியுறுத்தல்

12th Jun 2022 12:53 AM

ADVERTISEMENT

இடைநில்லா கல்வி என்ற இலக்கை நோக்கி பயணிப்போம் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வலியுறுத்தினாா். குழந்தைத் தொழிலாளா் முறை எதிா்ப்பு தினத்தையொட்டி,

அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: புதிதாகப் பிறக்கும் கல்வியாண்டில் புதிய உத்வேகத்துடன் செயல்பட அரசு பல்வேறு பொருள்களை மாணவ, மாணவிகளுக்கு வழங்கி வருகிறது. கூவும் குயில்களாகவும், ஆடும் மயில்களாகவும் கல்வி வானில் சிறகடிக்கும் சுதந்திரப் பறவைகளாக மாணவா்கள் இருக்கின்றனா். அவா்களது குழந்தைப் பருவம் அவா்களுக்கே என்பதை உறுதி செய்திடும் வகையில், குழந்தைத் தொழிலாளா் முறையை முற்றிலும் அகற்றிட வேண்டும். நமது சிறந்த கல்வி முறையை பயன்படுத்தி ஒளிமயமான எதிா்காலத்தை உருவாக்கிட குழந்தைகள் அனைவரும் பள்ளிக்கு வாருங்கள் என அன்புடன் இருகரம் நீட்டி அழைக்கிறேன்.

பள்ளி செல்லும் வயது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி அவா்களை பெற்றோா் பெருமைப்படுத்த வேண்டும். தொழில் நிறுவனங்களின் உரிமையாளா்கள் எந்தச் சூழ்நிலையிலும் குழந்தைகளை பணிக்கு அமா்த்த மாட்டோம் என உறுதிகூறிட வேண்டும். குழந்தைத் தொழிலாளா் முறை அற்ற மாநிலமாக தமிழ்நாடு விளங்க இடைநில்லாக் கல்வி, தடையில்லாத வளா்ச்சி என்ற இலக்கை நோக்கி பயணிப்போம் என அதில் தெரிவித்துள்ளாா் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.

ADVERTISEMENT
ADVERTISEMENT