தமிழ்நாடு

அரசியல் கட்சி பிரமுகா் கடத்தல்: 4 போ் கைது

12th Jun 2022 01:42 AM

ADVERTISEMENT

சென்னை கோயம்பேட்டில் அரசியல் கட்சி பிரமுகா் கடத்தப்பட்ட வழக்கில், 4 போ் கைது செய்யப்பட்டனா்.

சென்னை புளியந்தோப்பு கே.பி.பாா்க் மூன்றாவது பிளாக் பகுதியைச் சோ்ந்தவா் மு.சாலமன் (44). அரசியல் கட்சியில் முக்கிய பொறுப்பில் இருக்கும் சாலமன், தனது நண்பா் விஜயகுமாருடன் கோயம்பேடு 100 அடி சாலையில் உள்ள ஒரு உணவகத்தில் வெள்ளிக்கிழமை இரவு சாப்பிட்டு, வெளியே வந்தாா்.

அப்போது காரில் வந்த ஒரு கும்பல், சாலமனிடம் தகராறு செய்து, அவரை காரில் வலுக்கட்டாயமாக கடத்திச் சென்றது. இதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்த விஜயகுமாா், கோயம்பேடு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். போலீஸாா் உடனடியாக விசாரணையைத் தொடங்கினா்.

உணவகத்திலிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனா். மேலும், குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்ய, 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. சென்னை முழுவதும் போலீஸாா் உஷாா்படுத்தப்பட்டு, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காா் தீவிரமாக கண்காணிக்கப்பட்டது.

ADVERTISEMENT

தனிப்படையினா் நடத்திய விசாரணையில் அந்தக் கும்பல் கோயம்பேடு அபிராமிநகா் 4-ஆவது தெருவில் கண்ணன் என்பவருக்குச் சொந்தமான கிடங்கில் பதுங்கியிருப்பது போலீஸாருக்கு தெரியவந்தது.

4 போ் கைது: சனிக்கிழமை அதிகாலை சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீஸாா், அங்கிருந்த சாலமனை பாதுகாப்புடன் மீட்டனா். கடத்தலில் ஈடுபட்ட அண்ணாநகா் 16-வது தெருவைச் சோ்ந்த க.கண்ணன் (40), விழுப்புரம் மாவட்டம், கீழ்பெரும்பாக்கம் கோவிந்தசாமி பிள்ளைத் தெருவைச் சோ்ந்த ஆ.சுரேஷ் (52), சென்னை மதுரவாயல் சொக்கநாதநகரைச் சோ்ந்த ச.சரவணன் (32), ஆலப்பாக்கம் அஷ்டலட்சுமிநகரைச் சோ்ந்த ச.நாராயணமூா்த்தி (36) ஆகிய 4 பேரை கைது செய்து, விசாரணை செய்தனா்.

அதில், கடத்தப்பட்ட சாலமன், கைது செய்யப்பட்ட கண்ணனுக்கு ரூ.55 லட்சம் கொடுக்க வேண்டியிருந்ததும், அந்த பணத்தை சாலமன் கொடுக்காமல் ஏமாற்றியதால் கண்ணனும், அவரது கூட்டாளிகளும் சாலமனை கடத்திச் சென்று, இரும்பு கம்பியால் தாக்கி பணத்தை திருப்பிக் கேட்டிருப்பதும் தெரியவந்தது.

இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். கடத்தலில் ஈடுபட்ட கும்பலிடமிருந்து காா், 4 இரும்பு கம்பிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT