தமிழ்நாடு

பாரத்நெட் திட்டத்தில் கண்ணாடி இழை கம்பிவடம் பதிக்கும் பணி: முதல்வர் தொடக்கிவைத்தார்

10th Jun 2022 05:45 AM

ADVERTISEMENT


சென்னை: பாரத்நெட் திட்டத்தைச் செயல்படுத்தும் வகையில், கண்ணாடி இழை கம்பி வடம் பதிக்கும் பணியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கிவைத்தார். 
இந்தத் திட்டம் மூலம் மாநிலத்தின் அனைத்து ஊராட்சிகளிலும் பாதுகாப்பான, விரைவான இணைய சேவையை பெற முடியும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், முத்தலகுறிச்சி ஊராட்சியில் கண்ணாடி இழை கம்பி வடத்தை பதிக்கும் பணியை, சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை தொடக்கி வைத்தார்.
 இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: 
தமிழகத்தில் உள்ள 12 ஆயிரத்து 525 ஊராட்சிகளையும் கண்ணாடி இழை கம்பி வடம் மூலம் இணைத்து, அதிவேக இணைய இணைப்பு வழங்குவதே பாரத்நெட் திட்டமாகும். இந்தத் திட்டமானது, தமிழக அரசின், கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் மூலமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
நான்கு தொகுப்புகள்: பாரத்நெட் திட்டம் நான்கு தொகுப்புகளாகப் பிரிக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. 
தொகுப்பு ஏ-வில், காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், கிருஷ்ணகிரி, செங்கல்பட்டு, சென்னை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களும், தொகுப்பு பி-யில், கடலூர், அரியலூர், பெரம்பலூர், தருமபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு, நீலகிரி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களும் வருகின்றன. 
தொகுப்பு சி-யில், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, நாமக்கல், கரூர், கோயம்புத்தூர், திருப்பூர், திருச்சி, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களும், தொகுப்பு டி-யில், கன்னியாகுமரி, மதுரை, ராமநாதபுரம், தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர், தென்காசி, திண்டுக்கல், சிவகங்கை ஆகிய மாவட்டங்களும் வருகின்றன.
இந்தத் திட்டம் மூலம் பொது மக்களுக்கு குறைந்த விலையில் மின்னணு சேவைகள், இணையவழி கல்வி, தொலை மருத்துவம், தொலைபேசி, தொலைக்காட்சி மற்றும் இணையம் ஆகிய சேவைகளை வழங்க முடியும். அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், தொழில் நிறுவனங்கள் ஆகியன அதிவேக இணையதள சேவையைப் பெறுவதன் மூலம் கிராம அளவில் அரசின் பல்வேறு திட்டங்கள் மக்களை விரைந்து சென்றடையும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT