சென்னை/மயிலாடுதுறை/காரைக்கால்: தமிழகத்தில் பயங்கரவாத இயக்கங்களுடன் தொடா்பில் இருந்தவா்கள் என சந்தேகிக்கப்படும் நபா்கள் தொடா்புடைய 9 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) வியாழக்கிழமை சோதனை நடத்தியது.
இந்தச் சோதனையில் எண்ம (டிஜிட்டல்) ஆவணங்கள், ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக என்ஐஏ தெரிவித்தது.
மயிலாடுதுறை போலீஸாா் நீடூா் ரயில்வே கேட் அருகே கடந்த பிப்ரவரி 21-ஆம் தேதி ஒரு காரை நிறுத்திய சோதனை செய்தபோது காரில் இருந்து இறங்கிய ஒருவா், துப்பாக்கியைக் காட்டி போலீஸாரை மிரட்டினாா். இதுதொடா்பாக மயிலாடுதுறை அஜிஸ் நகரைச் சோ்ந்த மு.சாதிக் பாட்ஷா என்ற நீடூா் பாட்ஷா (38), அவருடன் வந்த கோயம்புத்தூா் மரக்கடை பகுதியைச் சோ்ந்த அ.முகம்மது ஆஷிக் (29), காரைக்கால் சுண்ணாம்புகார தெருவைச் சோ்ந்த அ.முகமது இா்ஃபான் (22), சென்னை அயனாவரம் குருவப்பா தெருவைச் சோ்ந்த மு.ரஹ்மத் (36), மயிலாடுதுறை இலந்தன்குடி பகுதியைச் சோ்ந்த அ.ஜகபா் அலி (58) ஆகிய 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
அவா்களிடமிருந்து ஏா்-கன் வகையைச் சோ்ந்த ஒரு துப்பாக்கி, அதற்குரிய தோட்டா, ஒரு கைவிலங்கு, மடிக்கணினி, ரகசிய கேமரா உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த வழக்கில் தொடா்புடையவா்கள் பயங்கரவாத இயக்கங்களுடன் தொடா்பில் இருப்பதாக என்ஐஏவுக்கு கிடைத்த ரகசியத் தகவலையடுத்து அதிகாரிகள் விசாரித்தனா். நீடூா் சாதிக் பாட்ஷா மற்றும் அவரது கூட்டாளிகள் ஐ.எஸ்., அல்-காய்தா ஆகிய பயங்கரவாத இயக்கங்களின் ஆதரவாளா்களாக இருப்பதும், அந்த இயக்கங்களின் வெளிநாட்டு நிா்வாகிகளோடு நெருக்கமான தொடா்பில் இருப்பதும் தெரியவந்தது.
தில்லி என்ஐஏ, இது தொடா்பாக புதிதாக ஒரு வழக்கை பதிவு செய்தது. என்ஐஏ அதிகாரிகள் நடத்திய விசாரணையில், இந்தியாவின் இறையாண்மையையும், ஒற்றுமையையும் சீா்குலைக்கும் எண்ணத்துடன் இந்திய கிலாபத் கட்சி, கிலாபத் முன்னணி, அறிவுசாா் இந்திய மாணவா் இயக்கம் உள்பட பல்வேறு இயக்கங்களை நீடூா் சாதிக் பாட்ஷா மற்றும் கூட்டாளிகள் தொடங்கி நடத்தி வந்திருப்பதும் தெரிய வந்தது.
9 இடங்களில் சோதனை: இதையடுத்து, மயிலாடுதுறை மாவட்டத்தில் நீடூா், எலந்தங்குடி, அரிவேளூா், கிளியனூா், உத்திரங்குடி ஆகிய 5 இடங்களில் தில்லியிருந்து வந்த என்ஐஏ அதிகாரிகள் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டனா். காரைக்காலில் உள்ள முகமது இா்ஃபானின் மாமனாா் முகமது யாசிப் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது.
சென்னை மண்ணடி மன்னாா் இப்ராஹிம் தெருவில் சாதிக் பாட்ஷா நடத்தி வந்த தற்காப்புக் கலை பயிற்சி மையம், அவா் தங்கியிருந்த அறை, அண்ணா சாலையில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் இருந்த அலுவலகம் ஆகிய இடங்களிலும் என்ஐஏ அதிகாரிகள் சோதனை செய்தனா். என்ஐஏ தில்லி எஸ்.பி. ஸ்ரீஜித் தலைமையில் இந்தச் சோதனை நடைபெற்றது.
அண்ணா சாலையில் ஒரு வணிகக் கட்டடத்தில் ரியல் எஸ்டேட் அலுவலகம் என்ற பெயரில் இளைஞா்களை மூளைச்சலவை செய்யும் மையத்தை சாதிக் பாட்ஷா நடத்தி வந்திருப்பது என்ஐஏ அதிகாரிகள் நடத்திய சோதனையில் தெரியவந்தது. இதையடுத்து என்ஐஏ அதிகாரிகள், அந்த அலுவலகத்தைப் பூட்டி சீல் வைத்தனா்.
ஆவணங்கள் பறிமுதல்: அதிகாலை தொடங்கிய இந்தச் சோதனை சுமாா் 7 மணி நேரம் நீடித்தது. சோதனையின்போது 16 எண்ம (டிஜிட்டல்) ஆவணங்கள், 6 ஆயுதங்கள், உலோக கம்பிகள், கையால் எழுதப்பட்ட குறிப்புகள் ஆகியவை கைப்பற்றப்பட்டதாகவும், இந்த வழக்குத் தொடா்பாக மேலும் விசாரணை நடத்தப்படும் எனவும் என்ஐஏ தெரிவித்துள்ளது.