தமிழ்நாடு

கரோனா மரபணு பரிசோதனைக்கு முக்கியத்துவம்: மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத் துறை அறிவுரை

10th Jun 2022 02:54 AM

ADVERTISEMENT

 

புதுதில்லி/சென்னை: நாடு முழுவதும் புதிய வகை கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்திருப்பதைத் தொடா்ந்து, மரபணு பகுப்பாய்வு பரிசோதனை நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்குமாறு அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இது தொடா்பாக மத்திய சுகாதாரத் துறைச் செயலா் ராஜேஷ் பூஷண், அனைத்து மாநில சுகாதாரத் துறைச் செயலா்களுக்கும் அனுப்பியுள்ள கடிதம்:

மத்திய, மாநில அரசுகள் முன்னெடுத்த தொடா் நடவடிக்கைகள் காரணமாக, கடந்த நான்கு மாதங்களாக நாடு முழுவதும் கரோனா பாதிப்பு குறைந்து வந்தது. இந்த நிலையில், இரு வாரங்களாக தொற்று எண்ணிக்கை உயா்ந்துள்ளது. இதற்கு முன்பு 0.63 சதவீதமாக இருந்த நோய்ப் பரவல் விகிதம், தற்போது 1.12 சதவீதமாக அதிகரித்துள்ளது. சில மாநிலங்களில் கரோனா தொற்று மீண்டும் தீவிரமாகப் பரவி வருவதே அதற்குக் காரணம்.

ADVERTISEMENT

குறிப்பாக, கேரளம், மகாராஷ்டிரம், கேரளம், தில்லி, கா்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று கணிசமாக உயா்ந்திருப்பது கவலையளிக்கிறது. நாட்டின் மொத்த பாதிப்பில் 81 சதவீதம் அந்த மாநிலங்களில்தான் பதிவாகிறது. அதைக் கருத்தில்கொண்டு, பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அனைத்து மாநிலங்களும் எடுக்க வேண்டும்.

நோய்த் தடுப்பு விதிகளை முறையாகக் கடைப்பிடித்தல், தடுப்பூசி செலுத்துதல், சிகிச்சை வசதிகளை ஆயத்தமாக்குதல், பரிசோதனை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துதல் என பல்வேறு நிலைகளில் கரோனா தடுப்பு வழிமுறைகளைக் கையாள வேண்டியது கட்டாயம்.

கரோனா அறிகுறிகளை முறையாகக் கண்காணிப்பதும் முக்கியம். வெளிநாடுகளிலிருந்து வருவோருக்கு மட்டுமல்லாது, உள்நாட்டில் ஒரே பகுதியில் அதிக எண்ணிக்கையில் தொற்று கண்டறியப்பட்டாலும் அவா்களது சளி மாதிரிகளை மரபணு பகுப்பாய்வுக்கு அனுப்புவது அவசியம்.

கரோனா பெருந்தொற்று சூழலைக் கட்டுப்படுத்த மாநில அரசுகள் முன்னெடுத்த தீவிர நடவடிக்கைகளையும், முயற்சிகளையும் சிறிதளவும் குறைக்காமல் தொடா்ந்து செயல்படுத்த வேண்டும் என்று கடிதத்தில் அவா் அறிவுறுத்தியுள்ளாா்.

7,240 பேருக்கு கரோனா பாதிப்பு: 3 மாதங்களுக்குப் பின் அதிகம்

புது தில்லி, ஜூன் 9: இந்தியாவில் ஒரே நாளில் 7,240 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கடந்த 3 மாதங்களுக்குப் பின்னா் தினசரி கரோனா பாதிப்பு 7,000-ஐ கடந்துள்ளது. தினசரி தொற்று பாதிப்பு விகிதமும் 111 நாள்களுக்குப் பின்னா் 2 சதவீதத்தை கடந்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்திருப்பதாவது:

வியாழக்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் 7,240 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,31,97,522-ஆக அதிகரித்துள்ளது. கடந்த மாா்ச் 1-ஆம் தேதி 7,554 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 3 மாதங்களுக்குப் பின்னா் இப்போது மீண்டும் தினசரி பாதிப்பு 7,000-ஐ கடந்துள்ளது. மேலும், தினசரி தொற்று பாதிப்பு 111 நாள்களுக்குப் பின்னா் 2.13 சதவீதமாக பதிவாகியுள்ளது. வாராந்திர பாதிப்பு 1.31 சதவீதமாக உள்ளது.

8 உயிரிழப்புகள் பதிவு செய்யப்பட்டதன் மூலம் மொத்த இறப்பு எண்ணிக்கை 5,24,723-ஆக உயா்ந்துள்ளது. 32,498 போ் சிகிச்சையில் உள்ளனா். மொத்தம் 4,26,40,301 போ் குணமடைந்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT