தமிழ்நாடு

வெளிநாட்டிலிருந்து மீட்கப்பட்ட சிலைகள் கோயில்களில் ஒப்படைப்பு

10th Jun 2022 05:07 AM

ADVERTISEMENT

 

தஞ்சாவூர்: வெளிநாடுகளில் இருந்து மீட்கப்பட்ட சிலைகளில் 3 சிலைகள் தொடர்புடைய கோயில்களில் வியாழக்கிழமை மாலை ஒப்படைக்கப்பட்டன.

தமிழக கோயில்களில் இருந்து திருடப்பட்டு, வெளிநாடுகளில் விற்கப்பட்ட புராதன சிலைகள் குறித்து, சிலை திருட்டு தடுப்பு காவல் பிரிவினர் புலன் விசாரணை மேற்கொண்டனர்.

இதன் மூலம் அமெரிக்கா, ஆஸ்திரேலிய நாடுகளின் அருங்காட்சியகங்களில் இருந்த திருநெல்வேலி மாவட்டம், அத்தாளநல்லூர் மூன்றீஸ்வரமுடையார் கோயிலை சார்ந்த இரு துவார பாலகர் சிலைகள், தென்காசி மாவட்டம், ஆழ்வார்குறிச்சி நரசிங்கநாதர் கோயில் கங்காளமூர்த்தி, நந்திகேசுவரர் சிலைகள், தஞ்சாவூர் மாவட்டம், தீபாம்பாள்புரம் வன்மீகநாதர் கோயில் சிவன் பார்வதி சிலை, புன்னைநல்லூர் கைலாசநாதர் கோயில் நடராஜர் சிலை, அரியலூர் மாவட்டம், சுத்தமல்லி வரதராஜ பெருமாள் கோயில் விஷ்ணு, ஸ்ரீதேவி சிலைகள், நாகை மாவட்டம் சாயவனேசுவரர் கோயில் நின்ற நிலையிலான குழந்தை சம்பந்தர் சிலை, நடனமிடும் குழந்தை சம்பந்தர் சிலை (கோயில் கண்டறியப்படவில்லை) ஆகியவை மீட்கப்பட்டன.

ADVERTISEMENT

இச்சிலைகள் கும்பகோணம் நீதிமன்றத்தில் ஜூன் 6 ஆம் தேதி ஒப்படைக்கப்பட்டன. இவற்றில் நீதிமன்ற ஆணைப்படி, சிலைகள் தொடர்புடைய கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், தஞ்சாவூர் புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் பகுதியிலுள்ள கைலாசநாதர் கோயிலில் நடராஜர் சிலையை வியாழக்கிழமை மாலை சிலை திருட்டு தடுப்பு பிரிவு காவல் இயக்குநர் கே. ஜெயந்த் முரளி, காவல் தலைவர் ஆர். தினகரன், காவல் கண்காணிப்பாளர் ராஜாராம், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மலைச்சாமி உள்ளிட்டோர் ஒப்படைத்தனர்.

இச்சிலைகளைக் கோயில் நிர்வாகத்தினர், கிராம மக்கள் பட்டாசுகள் வெடித்து வரவேற்றனர். பின்னர், படிச்சட்டத்தில் நடராஜர் சிலை வைக்கப்பட்டு மேள தாளம், சிவ வாத்தியங்கள் முழங்க கோயிலுக்குள் கொண்டு செல்லப்பட்டது. இச்சிலைக்கு அபிஷேகம், ஆராதனை செய்யப்பட்டது.

இதேபோல, தீபாம்பாள்புரம் வன்மீகநாதர் கோயில் சிவன் பார்வதி சிலையையும், நாகை மாவட்டம் சாயவனேசுவரர் கோயில் குழந்தை சம்பந்தர் சிலையையும் தொடர்புடைய கோயில் அலுவலர்களிடம் சிலை திருட்டு தடுப்புப் பிரிவு காவல் அலுவலர்கள் ஒப்படைத்தனர்.

ஒரே நேரத்தில் 10 சிலைகள் மீட்டு சாதனை: இதையடுத்து, செய்தியாளர்களிடம் காவல் இயக்குநர் ஜெயந்த் முரளி தெரிவித்தது:

கடந்த 2012 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை 22 சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. இவற்றில் நிகழாண்டில் மட்டும் 10 சிலைகள் கொண்டு வரப்பட்டுள்ளன. இது ஒரு சாதனை. இதில், 6 சிலைகள் அமெரிக்காவிலிருந்தும், 4 சிலைகள் ஆஸ்திரேலியாவிலிருந்தும் மீட்கப்பட்டன.

இங்கு தொடர்புடைய கோயில் அலுவலர்களிடம் நடராஜர் சிலை, சிவன் பார்வதி சிலை, நின்ற நிலையிலான குழந்தை சம்பந்தர் சிலை ஆகியவற்றை வியாழக்கிழமை ஒப்படைத்தோம். இவற்றில் அமெரிக்காவிலிருந்து மீட்கப்பட்ட நடராஜர் சிலை 11 - 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படுகிறது.

நாகை சாயவனேசுவரர் கோயில் குழந்தை சம்பந்தர் சிலை 12 ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது. தீபாம்பாள்புரம் வன்மீகநாதர் கோயில் சிவன் பார்வதி சிலை 11 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இச்சிலையிலேயே தீபாம்பாள்புரம் எனப் பொறிக்கப்பட்டுள்ளது. இதை வைத்து அடையாளம் கண்டறிந்து மீட்கப்பட்டது.

இதையடுத்து, அரியலூர் மாவட்டம், சுத்தமல்லி வரதராஜ பெருமாள் கோயிலில் விஷ்ணு, ஸ்ரீதேவி சிலைகள் வெள்ளிக்கிழமை (ஜூன் 10) ஒப்படைக்கப்படவுள்ளன. திருநெல்வேலி மாவட்டம், அத்தாளநல்லூர் மூன்றீஸ்வரமுடையார் கோயிலை சார்ந்த கல்லில் செய்யப்பட்ட இரு துவார பாலகர் சிலைகள் ஏற்கெனவே ஒப்படைக்கப்பட்டுவிட்டன.


தஞ்சாவூர் புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் கைலாசநாதர் கோயில் அர்ச்சகரிடம் நடராஜர் சிலையை வியாழக்கிழமை மாலை ஒப்படைக்கிறார் சிலை திருட்டு தடுப்பு பிரிவு காவல் இயக்குநர் கே. ஜெயந்த் முரளி.

ADVERTISEMENT
ADVERTISEMENT