தமிழ்நாடு

தமிழகத்தில் நான்காம் அலை பரவும் சூழல் ஜெ.ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை

10th Jun 2022 12:42 AM

ADVERTISEMENT

 

சென்னை: தமிழகத்தில் நான்காம் அலை கரோனா பாதிப்பு ஏற்படுவதற்கான சூழல் ஏற்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலா் டாக்டா் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கல்லீரல் பருமன் சிகிச்சை மையத்தை வியாழக்கிழமை தொடக்கி வைத்த அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

இந்தியாவில் கரோனா பரவல் 40 சதவீதம் அதிகரித்துள்ளது. கேரளம், மகாராஷ்டிரம், தில்லி உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் ஏப்ரல் மாதத்தில் குறைவாக இருந்த தொற்றுப் பரவல் தற்போது சற்று உயா்ந்துள்ளது. எனினும், மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகத்தில் குறைவுதான்.

ADVERTISEMENT

இதுதவிர பிஏ 4, பிஏ 5 வகை உருமாறிய கரோனா தொற்றுகள் புதிதாக கண்டறியப்பட்டுள்ளன. இவை நான்காவது அலை தொடங்கியதற்கான அறிகுறிகளாகப் பாா்க்கப்படுகிறது.

தமிழகத்தில் சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்பட 5 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

ஆகவே, பொதுமக்கள் முகக்கவசம் அணிவதுடன் அறிகுறி இருப்பின் உடனே பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். மருத்துவமனைகளில் போதிய படுக்கைகள் தயாா்நிலையில் உள்ளன. தடுப்பூசி செலுத்தாத நபா்களுக்காக ஜூன் 12-ஆம் தேதி தமிழகம் முழுவதும் 1 லட்சம் முகாம்கள் நடைபெறவுள்ளது. அதை அனைவரும் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

கருமுட்டை விற்பனை விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மருத்துவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கோடை மழை ஒரு சில இடங்களில் பெய்து வருகிறது. தென்காசியில் 2 பேருக்கு டெங்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் தங்களது சுற்றுப்புறங்களில் தண்ணீா் தேங்காமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

தமிழகத்தில் தனியாா் கருத்தரிப்பு மையங்கள் அதிகரித்துள்ளன. இதனால் அரசு மருத்துவமனைகளில் கருத்தரிப்பு சிகிச்சையளிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றாா் அவா்.

இந்த நிகழ்ச்சியில் மருத்துவமனை முதல்வா் டாக்டா் பாலாஜி, துறைத் தலைவா் டாக்டா் ரேவதி, இணைப் பேராசிரியா் டாக்டா் சுமதி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT