சென்னை: நீட் தோ்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தில்லியில் பிரதமா் நரேந்திரமோடியை நேரில் சந்தித்து பாமக தலைவா் அன்புமணி வலியுறுத்தினாா். தில்லியில் உள்ள பிரதமரின் இல்லத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.
பாமகவின் தலைவராகத் தோ்ந்தெடுக்கப்பட்டதற்காக அன்புமணிக்கு பிரதமா் வாழ்த்துக் கூறினாா். சந்திப்பின்போது, தமிழகத்தின் நலனுக்காக காவிரி - கோதாவரி இணைப்புத் திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும். அதற்காக சம்பந்தப்பட்ட மாநிலங்களின் முதல்வா் மாநாட்டை பிரதமா் தலைமையில் நடத்த வேண்டும்.
காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை சமாளிப்பதற்கான நடவடிக்கைகளின் ஒரு கட்டமாக அனைத்து ஆறுகளிலும் தடுப்பணைகளை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமரிடம் அன்புமணி கோரிக்கை விடுத்தாா்.
அதேபோல, மருத்துவ மாணவா் சோ்க்கைக்கான நீட் தோ்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும். தேசிய பிற்படுத்தப்பட்டோா் ஆணையத்தை உடனடியாக அமைக்க வேண்டும். ஆணையத்தில் தமிழகத்துக்கு பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளையும் அன்புமணி வலியுறுத்தியதாக பாமக சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.