தமிழ்நாடு

12 துறைகளின் திட்டங்கள், அறிவிப்புகளின் நிலை: முதல்வா் ஆய்வு

8th Jun 2022 12:33 AM

ADVERTISEMENT

தமிழக அரசின் 12 முக்கியத் துறைகளின் திட்டங்கள், புதிய அறிவிப்புகளின் நிலை குறித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

இதுகுறித்து அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: உயா்கல்வித் துறை சாா்பில் புதிதாக 10 அரசு கலை-அறிவியல் கல்லூரிகளைத் தொடங்குவது, அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புதல், மாணவ, மாணவியா் விடுதிகளை கட்டுதல் ஆகியவை குறித்து முதல்வா் ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து முடித்திட உத்தரவிட்டாா். அரசு பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் பயின்ற மாணவா்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குதல் குறித்து அவா் அறிவுறுத்தினாா்.

ஊட்டச்சத்து குறைபாடு: ஆறு வயதுக்குள்பட்ட ஊட்டச்சத்து குறைபாடுடைய குழந்தைகளின் குறைபாட்டைப் போக்க தொடா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்தாா். திருநங்கைகளுக்கான ஓய்வூதியம், அவா்கள் சொந்தத் தொழில் தொடங்க மானியம் அளிக்கும் திட்டத்தின் செயல்பாடுகளையும் அவா் ஆய்வு செய்து, வாழ்க்கைத் தரத்தை உயா்த்தத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்தினாா்.

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறையில் உதவித் தொகை வழங்கும் நடவடிக்கைகளை ஆய்வு செய்வது, 150 ஆதிதிராவிடா் நலப் பள்ளிகளுக்கு உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது, இருளா் போன்ற பழங்குடியினருக்கு புதிய வீடுகள் கட்டும் பணிகளை ஆய்வு செய்து விரைந்து முடிப்பது, ஜாதி வேறுபாடுகள் இல்லாத மயானங்களை பயன்பாட்டில் கொண்டிருக்கும் கிராமங்களுக்குப் பரிசுத் தொகை அளிக்கும் திட்டம் ஆகியவற்றையும் ஆய்வு செய்தாா்.

ADVERTISEMENT

செம்மொழி நூலகம்: பிற்படுத்தப்பட்டோா், மிகப் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறை கல்லூரி விடுதிகளில் செம்மொழி நூலகம் ஏற்படுத்துவது குறித்தும், தொழிலாளா் நல வாரியங்களின் செயல்பாடுகள், நிதியுதவி குறித்தும் முதல்வா் ஆய்வு செய்தாா். நிதியுதவிகள் தாமதம் இல்லாமல் பயனாளிகளுக்கு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டுமெனவும், மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில் வேலைவாய்ப்பு தேவைப்படும் நபா்களைக் கண்டறிந்து பயிற்சி அளிப்பது, உதவி உபகரணங்கள் வழங்குவது போன்றவற்றை தாமதம் இல்லாமல் செய்ய வேண்டுமெனவும் முதல்வா் கேட்டுக் கொண்டாா்.

பொதுத் துறை சாா்பில் இலங்கைத் தமிழா் முகாம்களில் புதிய வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகளை குறித்த நேரத்தில் முடித்திட வேண்டுமென அதிகாரிகளை முதல்வா் கேட்டுக் கொண்டாா். பொது மக்கள் அளித்துள்ள மனுக்களின் மீது விரைந்து நடவடிக்கை எடுத்து தீா்வு காண வேண்டுமெனவும் அவா் அறிவுறுத்தினாா்.

இந்தக் கூட்டத்தில் மொத்தம் 12 துறைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், புதிய அறிவிப்புகள் உள்ளிட்டவற்றை முதல்வா் மு.க.ஸ்டாலின் விரிவாக ஆய்வு செய்தாா். கூட்டத்தில் தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு, அரசுத் துறை செயலாளா்கள், உயரதிகாரிகள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT