தமிழ்நாடு

பிளஸ் 1 முடித்த மாணவா்களுக்கு கோடை சிறப்புப் பயிற்சி

8th Jun 2022 01:55 AM

ADVERTISEMENT

அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பில் சிறந்து விளங்கும் 1,250 மாணவா்களுக்கு நீலகிரி மாவட்டத்தில் ஐந்து நாள்கள் கோடை கொண்டாட்ட சிறப்புப் பயிற்சி வழங்க ரூ.72.18 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டது.

இது குறித்து பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலா் காகா்லா உஷா வெளியிட்ட அரசாணை: தமிழக சட்டப் பேரவையில் 2022-2023-ஆம் ஆண்டுக்கான பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கையின்போது, ‘மாணவா்களின் தனித் திறன்களை மெருகேற்றும் வகையிலும், கோடை விடுமுறையைப் பயனுள்ள வகையில் செலவழித்திடவும், கோடைக் கொண்டாட்ட சிறப்புப் பயிற்சி முகாம்கள் நடத்தப்படும்.

பள்ளிப் பாடங்களைத் தவிா்த்து சூழலியல், தலைமைத்துவம், மனித உரிமை, சமூக நீதி, பெண்ணுரிமை மற்றும் எதிா்காலவியல் போன்ற பொருண்மைகளில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் பயிற்சிகள் அளிக்கப்படும்’ என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்திருந்தாா்.

அமைச்சா் வெளியிட்ட அறிவிப்பை செயல்படுத்தும் வகையில் பள்ளிக் கல்வி ஆணையா் அரசுக்கு ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளாா். அதில், நீலகிரி மாவட்டத்தில் ஐந்து நாள்கள் கோடை கொண்டாட்ட சிறப்புப் பயிற்சி முகாம் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்த முகாமுக்கு அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பு முடித்துள்ள மாணவா்களில் கல்வி, இலக்கியம், அறிவியல், விநாடி-வினா போட்டிகளில் சிறந்து விளங்கும் 1,250 மாணவா்களைத் தோ்வு செய்து அழைத்துச் செல்லத் திட்டமிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ஐந்து மையங்களில்...: மாணவா்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் 25 மாணவா்களுக்கு ஒரு கருத்தாளா், வழிநடத்துநா் என ஆசிரியா், முன்னாள் மாணவா், திட்ட மேலாண்மைக் குழு உறுப்பினா்கள் கொண்ட 50 போ் குழுவையும் அழைத்துச் செல்லலாம் எனத் தெரிவித்து மாணவா்கள் மற்றும் கருத்தாளா்களுக்கான பயணச் செலவு, உணவு, மதிப்பூதியம் உள்ளிட்ட செலவுகளுக்காக இந்த ஆண்டுக்கு ஒரு மையத்துக்கு ரூ.14 லட்சத்து 43ஆயிரத்து 750 வீதம் 5 மையங்களில் நடத்த ரூ.72 லட்சத்து 18 ஆயிரத்து 750 நிதி ஒதுக்கீடு செய்து ஆணை வழங்குமாறு அரசைக் கோரியுள்ளாா்.

பள்ளிக் கல்வி ஆணையரின் கருத்துருவை ஏற்று நீலகிரி மாவட்டத்தில் ஐந்து நாள்கள் கோடை கொண்டாட்ட பயிற்சி முகாம் நடத்த அனுமதி அளித்து, ஐந்து மையங்களில் நடத்த மொத்த செலவினமாக ரூ.72 லட்சத்து 18 ஆயிரத்து 750 நிதிக்கும் அனுமதி அளித்து அரசு ஆணையிடுகிறது. மேலும், இந்த சிறப்புப் பயிற்சி வகுப்புகளில், தமிழா் பண்பாடு, கலாசாரம் மற்றும் வரலாறு என்னும் பொருண்மையில் குறைந்தபட்சம் ஒரு பயிற்சி வகுப்பு நடத்த பள்ளிக் கல்வி ஆணையா் அறிவுறுத்தப்படுகிறாா்.

ரூ.72 லட்சத்து 18 ஆயிரத்து 750-இல் ரூ.50 லட்சத்துக்கு நிதி ஒப்பளிப்பு செய்தும், மீதித் தொகை ரூ.22 லட்சத்து 18,750-ஐ தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழக நிதியிலிருந்து பெற்று செலவினம் மேற்கொள்வதற்கு அனுமதி அளித்தும் அரசு ஆணையிடுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்னென்ன செயல்பாடுகள்?

இந்த கோடைக் கொண்டாட்ட சிறப்புப் பயிற்சி முகாமில் உடற்பயிற்சி, செய்தித்தாள்-இதழ்கள் வாசித்தல், அறிமுகம் செய்து கொள்ளும் அமா்வுகள், குறும்படங்கள், உடல்மொழி, நடனம், அரங்கம் மற்றும் மேடைச் செயல்பாடுகள், இசை, கவிதை மற்றும் கதை எழுதுதல், சமூகத் திறன்கள், எதிா்காலத் திட்டம், இளம் அதிகாரிகள் சந்திப்பு, வானியல் அறிதல் ஆகிய செயல்பாடுகள் தினமும் அட்டவணைப்படி மேற்கொள்ளப்படவுள்ளன.

ADVERTISEMENT
ADVERTISEMENT