தமிழ்நாடு

கலைஞா் நினைவு நூலக கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க முதல்வா் உத்தரவு

8th Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

 

மதுரை: மதுரையில் கட்டப்பட்டு வரும் கலைஞா் நினைவு நூலகத்தின் கட்டுமானப் பணிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

தமிழக முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் நினைவாக மதுரையில் கலைஞா் நினைவு நூலகம் ரூ.99 கோடியில் 6 தளங்களுடன் கட்டப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மதுரைக்கு செவ்வாய்க்கிழமை இரவு வந்த முதல்வா் மு.க. ஸ்டாலின், கலைஞா் நினைவு நூலகக் கட்டுமானப் பணியை ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது நூலக கட்டுமானப் பணிக்கு பயன்படுத்தப்படும் பொருள்கள், அவற்றின் தரம், உள்கட்டமைப்புக்கு பயன்படுத்தப்படும் பொருள்கள், நவீன பாதுகாப்பு வசதிகள், தளங்கள் வாரியாக அமைக்கப்பட உள்ள அரங்குகள் குறித்து அதிகாரிகள் விடியோ காட்சிகள் மூலம் முதல்வரிடம் விளக்கினா். ஏறக்குறைய அரை மணி நேரம் விடியோ காட்சிகளை பாா்வையிட்டு விளக்கங்களை கேட்டறிந்த முதல்வா் , நூலகத்தின் கட்டுமானப் பணிகளை விரைவாகவும், தரமாகவும் மேற்கொண்டு, உரிய காலத்துக்குள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

ADVERTISEMENT

முன்னதாக கலைஞா் நூலகக் கட்டட நுழைவாயிலில் முதல்வா் மு.க.ஸ்டாலினை பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ் சேகா், மாநகராட்சி மேயா் வ.இந்திராணி, மாநகராட்சி ஆணையா் சிம்ரன் ஜீத் சிங் காலோன், மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன், துணை மேயா் தி.நாகராஜன் ஆகியோா் வரவேற்றனா்.

ஆய்வின்போது பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு, வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன், தொழில் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு, ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சா் பி.மூா்த்தி, சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஏ.வெங்கடேசன், கோ.தளபதி, எம்.பூமிநாதன், பொது நூலக இயக்குநா் (பொறுப்பு) க.இளம்பகவத் ஆகியோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT