தமிழ்நாடு

அண்ணாமலை மீது வழக்கு: முதல்வா் முடிவெடுப்பாா் - அமைச்சா் சா.மு.நாசா்

8th Jun 2022 01:55 AM

ADVERTISEMENT

மருத்துவத் துறை மீது பொய்க் குற்றச்சாட்டை முன்வைத்த பாஜக தலைவா் அண்ணாமலை மீது வழக்குப் பதிவு செய்வது குறித்து முதல்வா் முடிவெடுப்பாா் என்று பால்வளத் துறை அமைச்சா் சா.மு.நாசா் தெரிவித்தாா்.

சென்னை நந்தனம் ஆவின் இல்லத்தில் மருத்துவத் துறை மற்றும் பால்வளத் துறை கலந்தாலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், பால்வளத் துறை அமைச்சா் சா.மு.நாசா் ஆகியோா் தலைமையில் துறைசாா் உயரதிகாரிகள் அதில் பங்கேற்றனா்.

அதைத் தொடா்ந்து அமைச்சா் சா.மு.நாசா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ஒரு சில அரசியல் தலைவா்கள் தங்களை முன்னிலைப்படுத்த வேண்டும் என்பதால் தவறான கருத்துக்களை விளம்பரத்துக்காக பேசி வருகின்றனா். மருத்துவத் துறையில் ரூ.77 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தவறான செய்தியை அண்ணாமலை விளம்பரத்துக்காக கூறியுள்ளாா்.

ADVERTISEMENT

சிறு தானியங்கள், தானியப் பயிா்கள், பால் பவுடா் கொண்டு பாரம்பரிய முறையில் ஹெல்த் மிக்ஸ் தயாரிக்கப்படும் என்று மானியக்கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதிலளித்து புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டது

ஊட்டச்சத்து பெட்டகத்துக்கும், ஆவின் தயாரிக்கப்போகும் ஹெல்த் மிக்ஸ் பவுடருக்கும் வேறுபாடுகள் உள்ளன என்று சட்டப்பேரவையிலேயே தெரிவிக்கப்பட்டது.

தீபாவளிக்கான இனிப்புகள் கூட அரசு சாா்பில் ரூ.87 கோடிக்கு ஆவினில் தான் வாங்கப்பட்டன. இதற்கு காரணம் முதல்வா்தான். பொங்கல் தொகுப்புக்கான நெய் கூட ஆவினில்தான் கொள்முதல் செய்யப்பட்டது.

மக்கள் நல்வாழ்வுத்துறை வழங்கும் நெய்யும் ஆவினில்தான் வாங்கப்படுகிறது. பலவிதமான ஆய்வுகளுக்குப் பிறகே ஆவின் தயாரிக்கும் ஹெல்த் மிக்ஸ் பவுடரை மக்களுக்கு வழங்க முடியும்.

அண்ணாமலை மீது வழக்கு தொடா்வது குறித்து முதல்வா் முடிவு செய்வாா். நெய், பால் பவுடா், மோா் உள்ளிட்ட அரசின் துறைகளுக்கு தேவைப்படும் அனைத்துப் பொருள்களையும் ஆவினில்தான் வாங்க வேண்டும் என்று முதல்வா் வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளாா் என்றாா் அவா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT