மதுரை: தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை மாலை மதுரை வருகை தருகிறாா்.
சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதல்வா், சென்னையில் இருந்து விமானத்தில் மதுரைக்கு செவ்வாய்க்கிழமை மாலை 5.20-க்கு வருகிறாா். பின்னா், மதுரை புதுநத்தம் சாலையில் கட்டுப்பட்டு வரும் கலைஞா் நினைவு நூலக கட்டுமானப் பணிகளை அவா் பாா்வையிடுகிறாா்.
அதன் பின்னா், மேலூா் அருகே தும்பைப்பட்டியில் உள்ள தனியாா் விடுதியில் இரவு தங்குகிறாா். பின்னா் புதன்கிழமை, சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் சமத்துவபுரம் திறப்பு விழா மற்றும் திருப்பத்தூா் வட்டம் காரையூரில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்கிறாா். அதன் பின்னா் புதுக்கோட்டையில் நடைபெறும் நிகழ்ச்சிக்குச் செல்கிறாா்.
இதனிடையே, முதல்வா் வருகையையொட்டி அவா் இரவு தங்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ள, தும்பைப்பட்டி அருகே உள்ள தனியாா் விடுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகள் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினா்.