தமிழ்நாடு

பிரசவித்த இளம்பெண் பலி: சேலம் ஆட்சியர் அலுவலகம் முன்பு மறியல்

7th Jun 2022 01:08 PM

ADVERTISEMENT

சேலம்: சேலம் அரசு மருத்துவமனையில் மருத்துவரின் அலட்சியப் போக்கால் குழந்தை பிரசவித்த இளம்பெண்  மரணமடைந்ததாகக் கூறி, உறவினர்கள் ஆட்சியர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் தாசநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் ஜேசிபி மெக்கானிக். இவரது மனைவி கலைவாணி(34), கடந்த மாதம் 24 ஆம் தேதி பிரசவத்திற்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதையும் படிக்க.. திருடிய லாக்கரை நகைகளோடு குப்பைத் தொட்டியில் வீசிய திருடர்கள்: ஏன்? எதற்கு?

அடுத்த நாளே கலைவாணிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த நிலையில் திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டு நேற்று இரவு கலைவாணி உயிரிழந்தார். கலைவாணி உயிரிழந்த தகவல் கேட்டு உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் மருத்துவமனையில் திரண்டிருந்த உறவினர்கள் அரசு மருத்துவமனையில்  பயன்படுத்திய மயக்க மருந்து அதிகளவில் கொடுத்ததால்தான் கலைவாணி உயிரிழந்ததாகக் கூறி, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக  நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலையில் அமர்ந்து தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ADVERTISEMENT

 இதையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். ஒரு மணி நேர பேச்சுவார்த்தைக்கு பிறகு போராட்டத்தை கைவிட்டு உறவினர்கள் கலைந்து சென்றனர்.

இதுகுறித்து உறவினர்கள் கூறும்போது,  தவறான சிகிச்சை அளித்த மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். 25 லட்ச ரூபாய் நிவாரணம் அளிக்க வேண்டும் என்றும் பிரேத பரிசோதனையின்போது விடியோ பதிவு செய்ய வேண்டும்  என்றும் தெரிவித்துள்ளனர்.

பிரசவித்த பெண்ணை மருத்துவமனை வளாகத்தில் ஒவ்வொரு பரிசோதனைக்கும் செவிலியர்களின்  உதவியில்லாமல் நடந்தே அழைத்துச் சென்றதால் தான்  உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டினர்.

உயிரிழந்த கலைவாணிக்கு மனநல பாதிப்பு மற்றும் தைராய்டு பிரச்னை  இருந்ததாகவும் அதன் அடிப்படையில்  பெண் உயிரிழந்திருக்கலாம் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் பிரேத பரிசோதனைக்கு பிறகு முழு விவரம் தெரியவரும் என்று மருத்துவமனை முதல்வர் தெரிவித்துள்ளார்.

மருத்துவரின் அலட்சியப் போக்கால் பிரசவித்த பெண் உயிரிழந்த சம்பவத்திற்கு உறவினர்கள் ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்னா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது
 

ADVERTISEMENT
ADVERTISEMENT