தமிழ்நாடு

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆய்வு: காத்திருக்கும் அதிகாரிகள்

7th Jun 2022 01:32 PM

ADVERTISEMENT


சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயிலின் வரவு - செலவு உள்ளிட்ட கணக்குகளை அளிக்க தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், ஆய்வுக்கு வந்த அறநிலையத்துறை குழுவினர், கோயில் வளாகத்திலேயே 3 மணி நேரத்துக்கும் மேலாக காத்திருக்கிறார்கள்.

சிதம்பரம் கோயில் வரவு-செலவு கணக்குகளை ஆய்வு செய்ய இன்று காலை கோயிலுக்குள் சென்ற அறநிலையத்துறை ஆய்வுக் குழுவினரிடம், கணக்குகளை தாக்கல் செய்ய தீட்சிதர்கள் மறுத்துவிட்டபோதும், ஆய்வுப் பணியை நடத்துவதில் உறுதியோடு இருக்கும் அதிகாரிகள் கோயில் மண்டபத்தில் காத்திருக்கிறார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையும் படிக்க.. திருடிய லாக்கரை நகைகளோடு குப்பைத் தொட்டியில் வீசிய திருடர்கள்: ஏன்? எதற்கு?

கோயில் கணக்கு சரிபார்ப்பு மற்றும் தணிக்கையினை சட்டப்பூர்வமான முறையில் அமைக்கப்பட்ட குழுவிற்கு முழு ஒத்துழைப்பை வழங்க தயாராக இருக்கிறோம் என்று கோயில் நிர்வாகம் தரப்பு வழக்குரைஞர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாக ரீதியான அலுவல் ஆய்வு செய்ய இந்து சமய அறநிலையத்துறை குழு  கோயிலுக்கு வந்தனர். இந்தக் குழுவில் இந்து சமய அறநிலையத் துறையின் ஆலய நிலங்களுக்கான கடலூர் துணை ஆணையரும், விசாரணை குழு ஒருங்கிணைப்பாளருமான சி.ஜோதி, பழனி திருக்கோயில் இணை ஆணையர் நடராஜன், வேலூர் மாவட்ட இணை ஆணையர் லட்சுமணன், பெரம்பலூர் உதவி ஆணையர் அரவிந்தன், திருநெல்வேலி மண்டல தணிக்கை அலுவலர் ராஜேந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமார் ஆகியோர் கோயிலுக்கு வந்துள்ளனர்.

பின்னர் ஆய்வு தொடர்பான ஆவணங்கள் மற்றும் தணிக்கை விவரங்களை அதிகாரிகள் கோயில் தீட்சிதர்களிடம் கேட்டனர். அப்போது பொது தீட்சிதர்கள் குழு சார்பில் வழக்குரைஞர் சந்திரசேகர் அவர்களிடம் சட்ட ரீதியான விதிமுறைகளை மேற்கோள்காட்டி,  சட்ட ரீதியாக அனுமதி பெற்று ஆய்வு மேற்கொள்ளுமாறு தெரிவித்தனர். 

இது குறித்து தீட்சிதர்கள் சார்பில் பேட்டியளித்த வழக்குரைஞர் சந்திரசேகர், "சரிபார்ப்பு மற்றும் தணிக்கையின் அதிகாரவரம்பை கொண்ட சரியான முறையில் அமைக்கப்பட்ட குழுவிற்கு முழு ஒத்துழைப்பை வழங்குவதே எங்கள் நோக்கம். 1959 சட்டத்தின் 107வது பிரிவின் வெளிச்சத்தில் மேலே குறிப்பிட்டுள்ள நீதித்துறை உத்தரவுகளுடன் படித்தால் அறநிலையத்துறை அல்லது அதன் அதிகாரிகளுக்கு தானாகவே பதிவுகளை ஆராய குழு அமைக்கவோ அல்லது ஆய்வு செய்யவோ அத்தகைய அதிகாரவரம்பு இல்லை. இந்துசமய கோயில் விருப்பப்படி எங்கள் சட்டத்தின் விதிகளின்படி அனைத்து கணக்குகளையும் மற்ற பதிவுகளையும் நாங்கள் பராமரிக்கிறோம் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம். 

தணிக்கையின் அதிகார வரம்பை கொண்ட செல்லுபடியாகும் வகையில் அமைக்கப்பட்ட குழுவிற்கு முழு ஒத்துழைப்பை வழங்குதல் எங்கள் நோக்கமாக உள்ளது.  உச்ச நீதிமன்றத்திற்கு கீழ்ப்படிந்து ஆய்வை திரும்பப் பெறுவதோடு பதிவுகள் மற்றும் கணக்குகளை அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்," என தெரிவித்தார்

இந்துசமய அறநிலையத் துறை அதிகாரிகள் இது சம்பந்தமாக ஆலோசனை செய்து வருகிறோம். இன்னும் ஆய்வு முடியவில்லை என விசாரணை குழு ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT