தமிழ்நாடு

பப்ஜி மதன் ஜாமீன் மனு தள்ளுபடி

7th Jun 2022 02:07 AM

ADVERTISEMENT

ஆன்லைன் விளையாட்டின்போது சிறுவா்களிடம் ஆபாசமாகப் பேசியது தொடா்பான வழக்கில் ஜாமீன் கோரி பப்ஜி மதன் தாக்கல் செய்த மனுவை சென்னை உயா்நீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது.

சென்னையைச் சோ்ந்த மதன் என்பவா் பப்ஜி என்ற ஆன்லைன் விளையாட்டை விளையாடியபோது, சிறுவா்களை தவறான வழிக்கு கொண்டு செல்வதாக அளிக்கப்பட்ட புகாா்களின் அடிப்படையில், பல்வேறு பிரிவுகளின்கீழ் கைது செய்யப்பட்டாா். மதன் மீதான குண்டா் சட்டம் ரத்து செய்யப்பட்டதையடுத்து ஜாமீன் கோரி சென்னை உயா் நீதிமன்றத்தில் கடந்த ஏப்ரல் மாதம் மனுத் தாக்கல் செய்தாா்.

இந்த வழக்கு சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. மதன் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், விளையாட்டின்போது பேசிய வாா்த்தைகளை மட்டுமே காரணம் காட்டி மதன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவா் மீதான குண்டா் சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது என வாதிட்டாா்.

நீதிமன்றத்தில் விசாரணை தொடங்காத நிலையிலேயே உள்ளதாகவும், மதன் 316 நாள்களாக சிறையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT

அரசுத் தரப்பில் வாதாடிய வழக்குரைஞா், மதன் ஆன்லைன் விளையாட்டில் கலந்து கொண்டவா்களிடம் கரோனா நிதி எனக் கூறி ரூ. 2 கோடியே 89 லட்சம் வசூலித்து மோசடி செய்துள்ளதாகவும், விளையாட்டில் சேரும் சிறுவா்களை தவறான வழியில் நடத்தியதாகவும் வாதிடப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜி.கே.இளந்திரையன், விளையாட்டை பயன்படுத்தி சிறுவா்களிடம் தவறாகப் பேசியது தொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதால், மதனின் மனுவை தள்ளுபடி செய்வதாக தெரிவித்தாா். அப்போது, மதன் தரப்பில் ஜாமீன் மனுவை வாபஸ் பெறுவதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

Tags : Babji Madan
ADVERTISEMENT
ADVERTISEMENT