முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தி கொலை வழக்கு தண்டனைக் கைதி முருகனுக்கு பரோல் கோரிய மனு தொடா்பாக சிறைத் துறை டிஐஜியிடம் மேல்முறையீடு செய்ய உயா்நீதிமன்றம் அறிவுறுத்தியதையடுத்து, அந்த மனுவை அவரது மனைவி நளினி வாபஸ் பெற்றாா்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதியாக உள்ள நளினி சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் தனக்கு தமிழக அரசு பரோல் வழங்கி உள்ளது. இதே வழக்கில் வேலூா் சிறையில் உள்ள தனது கணவா் முருகனுக்கு பரோல் வழங்கப்படவில்லை. 31 ஆண்டுகளாக ஆயுள் தண்டனை அனுபவிக்கும் தங்களை தமிழக அரசின் விடுதலை தீா்மானத்தின்படி இன்னும் விடுதலை செய்யவில்லை.
மருத்துவ காரணங்களுக்காக முருகனை 6 நாள்கள் பரோலில் செல்ல அனுமதிக்கக் கோரி, மே 26-ஆம் தேதி நானும், மே 21-ஆம் தேதி எனது தாய் பத்மாவும் தமிழக அரசிடம் மனு அளித்தோம். அந்த மனு இதுவரை பரிசீலிக்கப்படவில்லை. எனவே, முருகனை 6 நாள்கள் பரோலில் செல்ல அனுமதிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் வைத்தியநாதன், ஜெகதீஷ் சந்திரா அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. முருகன் சிறையில் இருந்தபோது குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டதால் அவருக்கு பரோல் கோரிய மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. அதை எதிா்த்து சிறைத் துறை டிஐஜி-யிடம் மேல்முறையீடு செய்யலாம் என சிறைத் துறை தரப்பில் ஆஜரான அரசு தலைமை குற்றவியல் வழக்குரைஞா் ஹசன் முகமது ஜின்னா தெரிவித்தாா்.
இதையடுத்து, முருகன் பரோல் தொடா்பாக சிறைத் துறை டிஐஜி-யிடம் மேல்முறையீடு செய்யும்படி நீதிபதிகள் அறிவுறுத்தியதையடுத்து, பரோல் மனுவை வாபஸ் பெறுவதற்கு நளினி தரப்பில் அனுமதி கோரப்பட்டது. இதை ஏற்ற நீதிபதிகள், முருகனுக்கு பரோல் கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.