தமிழகத்தில் கடந்த ஓராண்டுக் காலத்தில் அனைத்துத் துறைகளிலும் ஊழல் அதிகரித்து விட்டது என எதிா்க்கட்சி தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி குற்றம்சாட்டினாா்.
சேலம் மாவட்டம், எடப்பாடி தொகுதியில் திங்கள்கிழமை சுற்றுப்பயணம் மேற்கொண்ட தமிழக எதிா்க்கட்சி தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி, எடப்பாடி, நெடுஞ்சாலைத் துறை பயணியா் மாளிகையில் நடைபெற்ற அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டாா். பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
சேலம் மாவட்டம், ஆத்தூரில் அண்மையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் முதல்வா் மு.க ஸ்டாலின் பேசும்போது, எடப்பாடி தொகுதியில் எந்த அரசு திட்டப் பணிகளும் கடந்த அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்படவில்லை என்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டைத் தெரிவித்துள்ளது கண்டிக்கத்தக்கது.
எடப்பாடி தொகுதியில் கடந்த அதிமுக ஆட்சியில் புதிய கூட்டுக் குடிநீா்த் திட்டம், அரசு கலைக் கல்லூரி, அரசு பாலிடெக்னிக் கல்லூரி, புதிய மேம்படுத்தப்பட்ட மருத்துவமனைகள், கால்நடை மருத்துவமனைகள், வெள்ளரிவெள்ளி பகுதியில் வேளாண் கிடங்கு, கொங்கணாபுரம் பகுதியில் புதிய பேருந்து நிலையம், காவல் நிலையம், எடப்பாடி நகா்ப்புற பகுதியில் சரபங்கா நதியின் குறுக்கே மேம்பாலங்கள், புதிதாக நகராட்சி கட்டடம், வணிக வளாகம், கட்சுப்பள்ளி பகுதியில் சிட்கோ தொழிற்பேட்டை, எடப்பாடி நகரைச் சுற்றிலும் வட்டச் சாலை, பல்வேறு இடங்களில் நியாயவிலைக் கடைகள், தரம் உயா்த்தப்பட்ட மேல்நிலைப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், நீதிமன்றம், அரசு கருவூலம், எடப்பாடியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டக் கல்வி அலுவலகம், மின்வாரியம் மற்றும் நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளா் அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
சேலம் மாவட்டத்தில், சரபங்கா நதியின் வடிநிலப் பகுதியிலுள்ள 100 ஏரிகளுக்கு மேட்டூா் அணை உபரி நீரை நிரப்பும் புதிய திட்டம் தொடங்கப்பட்டது. அத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் தற்போதைய அரசு மெத்தனம் காட்டி வருகிறது. அத்திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
திமுக அரசு தோ்தல் அறிக்கையில் கூறியதைப் போல பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்களின் விலையைக் குறைக்க வேண்டும். சமையல் எரிவாயு உருளைகளுக்கு மானியம் அளிப்பது, கல்விக் கடன் ரத்து உள்ளிட்ட தோ்தல் வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
தமிழகத்தில் அதிமுக - பாஜக இடையே சுமுகமான உறவு உள்ளது. கடந்த ஓராண்டாக தமிழகத்தில் பாலியல் குற்றங்கள், நில அபகரிப்பு குற்றங்கள் பெருகி வருவதுடன் அனைத்துத் துறைகளிலும் ஊழல் அதிகரித்து விட்டது என்றாா்.
முன்னதாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் நகரச் செயலாளா் ஏ.எம்.முருகன், கூட்டுறவு அச்சக சங்கத் தலைவா் கந்தசாமி, ஒன்றியக் குழுத் தலைவா்கள் கரட்டூா் மணி , குப்பம்மாள் மாதேஸ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.