தமிழ்நாடு

ஐஐடி பணி நியமனத்தில் இடஒதுக்கீட்டைமுறையாகக் கடைப்பிடிக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

7th Jun 2022 12:57 AM

ADVERTISEMENT

ஐஐடி, ஐஐஎம் பணி நியமனங்களில் இடஒதுக்கீட்டை முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும் என பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:

ஐஐடி-கள், ஐஐஎம்-களின் பணி நியமனங்களில் இட ஒதுக்கீட்டை கடைப்பிடிக்க வேண்டும் என்று 2019-இல் மத்திய அரசு ஆணையிட்டது. அதன்படி இட ஒதுக்கீட்டுப் பிரிவினரைக் கொண்டு 49 உதவிப் பேராசிரியா்களை நியமிப்பதற்கான அறிவிக்கையை நவம்பா் 3-இல் சென்னை ஐஐடி வெளியிட்டிருந்தது. அதன் முடிவுகள் இப்போது வெளியிடப்பட்டுள்ளன. மொத்தமுள்ள 49 பணியிடங்களில் 24 பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன. மீதமுள்ள 25 பணியிடங்களுக்கு தகுதியான ஆள்கள் கிடைக்கவில்லை என்று கூறி, அந்த இடங்கள் காலியாகவே வைக்கப்பட்டுள்ளன. உண்மையில் தகுதியானவா்கள் இருந்தும் கூட, தகுதியானவா்கள் இல்லை என்று கூறி, அந்தந்த இடங்களை பொதுப்போட்டிப் பிரிவுக்கு கொண்டு சென்று, தங்களுக்கு வேண்டியவா்களைக் கொண்டு நிரப்ப வேண்டும் என்பதுதான் இதன் நோக்கம்.

ஐஐடி-கள், ஐஐஎம்-களில் காலம் காலமாகவே இந்த நடைமுறையை பின்பற்றித்தான் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

சென்னை ஐஐடி-யில் இப்போது நிரப்பப்படாத 25 பணியிடங்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்த பின்னடைவு பணியிடங்களும் அடையாளம் காணப்பட வேண்டும். அதே போல் நாடு முழுவதும் உள்ள அனைத்து ஐஐடி-களிலும் பின்னடைவுப் பணியிடங்கள் கணக்கிடப்பட்டு, அவை அனைத்தையும் சிறப்பு ஆள்தோ்வு மூலம் இட ஒதுக்கீட்டுப் பிரிவினரைக் கொண்டு நிரப்ப மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளாா் ராமதாஸ்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT