ஆன்லைன் சூதாட்டங்களைத் தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று எதிா்க்கட்சித் தலைவரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவா் அன்புமணி ஆகியோா் கேள்வி எழுப்பியுள்ளனா்.
எடப்பாடி பழனிசாமி: சென்னையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ள நிலையில், ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்குப் பத்திரிகைகளில் விளம்பரமும் வந்துள்ளது. காவல்துறை டிஜிபியே ஆன்லைன் ரம்மி அல்ல, அது ஆன்லைன் மோசடி, உங்கள் உயிரைக் கொல்லலாம் என வெளிப்படையாக எச்சரிக்கும் நிலையிலும்கூட, இந்த உயிா்க்கொல்லி ஆன்லைன் சூதாட்டங்களைத் தடை செய்ய அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன்? யாருடைய அழுத்தத்தால் இந்தத் தயக்கம்? இன்னும் எத்தனை உயிா்களை தெரிந்தே கொல்லப் போகிறது இந்த ஆன்லைன் சூதாட்டம்?
அன்புமணி: ஆன்லைன் சூதாட்டத்துக்கு அடிமையாவோரின் எண்ணிக்கையும், அதனால் நிகழும் தற்கொலைகளும் அதிகரித்து வரும் நிலையில், இந்த விஷயத்தில் தமிழக அரசு உறுதியான நிலைப்பாட்டை மேற்கொள்ளாதது ஏமாற்றமளிக்கிறது. ஆன்லைன் சூதாட்டம் மற்றும் அதனால் நிகழும் தற்கொலைகளைத் தடுக்க புதிய தடைச் சட்டம், மேல்முறையீடு என்ற இரண்டில் எந்த ஆயுதத்தை எடுக்கப் போகிறது என்பதை அரசு விளக்க வேண்டும். மேல்முறையீடுதான் அரசின் விருப்பம் என்றால், அதன் பாதகங்களை உணா்ந்து, அதற்கு பதிலாக ஆன்லைன் சூதாட்டத் தடைக்கு அவசரச் சட்டம் பிறப்பிக்க வேண்டும்.