தமிழ்நாடு

கலாம் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து சாதனை புரிந்த 4 வயது சிறுமி: ஆட்சியர் வாழ்த்து

6th Jun 2022 02:19 PM

ADVERTISEMENT

 

குறிஞ்சிப்பாட்டில் உள்ள 99 பூக்களின் பெயர்களையும், 110 அறிவியல் கண்டுபிடிப்புகளையும், கண்டுபிடிப்பாளர்களின் பெயர்களையும் குறைந்த நேரத்தில் கூறி சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த காஞ்சிபுரம் சிறுமியை நேரில் வரவழைத்து வாழ்த்து தெரிவித்தார் மாவட்ட ஆட்சியர்.

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மூர்த்தி - மாலதி தம்பதியினர், இவர்களுக்கு கனிஷ்கா என்ற 4 வயது மகள் உள்ளார். மூர்த்தி ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் கார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வரும் நிலையில், காஞ்சிபுரத்தில் குடும்பத்துடன் தங்கி பணியாற்றி வருகிறார்.

கடந்த ஆண்டு கரோனா கட்டுப்பாடுகளின் காரணமாக சிறுமி கனிஷ்கா எல்கேஜி வகுப்பில் சேர்க்கப்பட்டு ஆன்லைன் மூலம் படித்து வந்தார்.

ADVERTISEMENT

ஆன்லைன் வகுப்பில் படித்து வந்த நிலையில், சிறுமியின் ஞாபகத் திறனை பார்த்த பெற்றோர் முர்த்தி-மாலதி தம்பதியினர் தனது மகளை ஏதாவது சாதனை செய்ய பழக வேண்டும் என நினைத்து முயற்சி செய்தனர்.

அதன்படி, தமிழ் நூலான  குறிஞ்சிப்பாட்டில் உள்ள 99 பூக்களின் பெயர்களையும், 110 அறிவியல் கண்டுபிடிப்புகளையும், கண்டுபிடிப்பாளர்களின் பெயர்களையும் வாசிக்க வைத்து பயிற்சி அளித்தனர்.

குறிஞ்சிப்பாட்டில் உள்ள 99 பூக்களின் பெயர்களையும், 110 அறிவியல் கண்டுபிடிப்புகளையும், கண்டுபிடிப்பாளர்களின் பெயர்களையும் குறைந்த நேரத்தில் மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தியிடம் கூறும் சிறுமி கனிஷ்கா.

சிறுமி கனிஷ்கா நன்கு பயிற்சி பெற்ற பின்னர் தற்பொழுது 99 பூக்களின் பெயர்களையும் 52 வினாடிகளிலும், 110 கண்டுபிடிப்புகளையும், கண்டுபிடிப்பாளர்களின் பெயர்களையும் 3 நிமிடம் 3 வினாடிகளில் குறைந்த கால நேரத்தில் சொல்லி சாதித்து  கலாம் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து சாதனை புரிந்தார்.

கலாம் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த சிறுமியின் செயலை அறிந்து, மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி, சிறுமி கனிஷ்காவை நேரில் வரவழைத்து மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் முன்னிலையில் பாராட்டி வாழ்த்தினார்.

குறைந்த வயதில் அறிவுத்திறனோடு சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்த சிறுமியையும், சாதனை புரிய ஊக்குவித்த பெற்றோர்களையும் அனைத்து தரப்பினரும் வெகுவாக பாராட்டினார்கள்.

இதையும் படிக்க | என்சிசி மாணவர்களின் கடல் சாகச பயணம்: ஆளுநர் தமிழிசை தொடங்கி வைத்தார்

ADVERTISEMENT
ADVERTISEMENT