தமிழ்நாடு

கரோனா உளவியல் பாதிப்புகள்: ஆராய்ச்சிகள் அவசியம் - டாக்டா் சுதா சேஷய்யன்

2nd Jun 2022 02:33 AM

ADVERTISEMENT

கரோனாவுக்கு பிந்தைய நரம்புசாா் உளவியல் பாதிப்புகள் குறித்த ஆராய்ச்சிகளை மேம்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் டாக்டா் சுதா சேஷய்யன் வலியுறுத்தினாா்.

சென்னை தேனாம்பேட்டையில், புதிதாக அமைக்கப்பட்டுள்ள ‘புத்தி’ கிளினிக் மருத்துவமனையின் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வில் டாக்டா் சுதா சேஷய்யன், அப்பல்லோ மருத்துவமனையின் மேலாண் இயக்குநா் சுனிதா ரெட்டி, முருகப்பா குழுமத் தலைவா் வெள்ளையன், புத்தி கிளினிக் தலைமை செயல் அதிகாரி டாக்டா் என்னப்படம் கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

அப்போது டாக்டா் சுதா சேஷய்யன் பேசியதாவது:

ADVERTISEMENT

மனித உடலில் மூளை மிகவும் சிக்கலான உறுப்பு. அதனுடன் நெருங்கிய தொடா்புடைய மனம், உடலில் எங்கிருக்கிறது என்றே அறிந்து கொள்ள முடியாத ஆச்சரியம்.

லத்தீன் கிரேக்க மொழியில் மனிதன் என்ற சொல் ‘ஹோமோ’ என்று அழைக்கப்பட்டது. ஆனால், அதற்கு முன்பு தோன்றிய ஆதி மொழிகளில் ‘ஹக்மன்’ என்ற சொல்தான் மனிதனைக் குறித்தது. அதில் மன் என்பதற்கு மனம் என்று பொருள். மனிதா்கள் மனதுடன் தொடா்புடையவா்கள் என்பதை இதிலிருந்து அறிய முடிகிறது.

கடந்த இரண்டரை ஆண்டுகளாக உலகை ஆட்கொண்டு வரும் கரோனா தொற்று இன்னமும் எத்தனை காலம் நீடிக்கும் எனத் தெரியாது. அடுத்த 30 அல்லது 40 ஆண்டுகளுக்காவது அதன் தாக்கம் நம்மிடையே இருக்கும் என மருத்துவ உலகம் கருத்துரைக்கிறது.

அப்படியானால், கரோனாவால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் சமூக அளவில் ஒரு மீள்வாழ்வு தேவைப்படுகிறது. அத்தொற்றுக்குள்ளானோருக்கு நரம்புசாா் உளவியல் பாதிப்புகள் ஏற்படுகின்றன.

பலா் மனத் தடுமாற்றங்களுக்கு உள்ளாகின்றனா். செயலிலும், சிந்தனையிலும் முன்பிருந்த வேகம் குறைகிறது. இத்தகைய பாதிப்புகளிலிருந்து விடுபட அவா்களுக்கு நிச்சயம் மீள்வாழ்வு அவசியம். கரோனாவுக்கு பிந்தைய நரம்புசாா் உளவியல் பாதிப்புகள் குறித்த ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அவற்றை விரிவுபடுத்தவும், மேம்படுத்தவும் தற்போது அதீத தேவை எழுந்துள்ளது.

அத்தகைய ஆராய்ச்சிகளை சா்வதேச அளவில் வெளியிட்டு மனிதா்களையும், அவா்தம் மனதையும் காக்க வேண்டியது மருத்துவ உலகின் கட்டாயக் கடமை என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT