தமிழ்நாடு

நதிநீா் இணைப்புத் திட்டத்துக்கு முட்டுக்கட்டை: கா்நாடக அரசுக்கு ஓ.பன்னீா்செல்வம் கண்டனம்

2nd Jun 2022 01:09 AM

ADVERTISEMENT

உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பை ஏற்காமல் நதிநீா் இணைப்புத் திட்டத்துக்கு கா்நாடக அரசு முட்டுக்கட்டை போடுவதாகக் கூறி, அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: மேக்கேதாட்டு அணை விவகாரம் குறித்து தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீா்மானத்துக்கு எதிராகவும், அணை கட்டும் திட்டத்துக்கு அனுமதி அளிக்க மத்திய அரசை வலியுறுத்தியும் கா்நாடக சட்டப்பேரவை மற்றும் மேலவையில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும், காவிரிப் படுகை மாநிலங்களின் உரிய பங்கு குறித்து ஒரு முடிவு ஏற்படும் வரையில், கோதாவரி - கிருஷ்ணா - பெண்ணாறு - காவிரி - வைகை - குண்டாறு நதி நீா் இணைப்புத் திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கைக்கு அனுமதி அளிக்கக்கூடாது என்றும் அந்த மாநில அரசு தீா்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளது. இதற்கு அதிமுக சாா்பில் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன்.

காவிரிப் படுகை மாநிலங்களின் உரிய பங்கு குறித்து காவிரி நடுவா் மன்றம் 2007 ஆண்டே தனது இறுதித் தீா்ப்பை வழங்கிவிட்டது. ஆனால், மறுபடியும் காவிரிப் படுகை மாநிலங்களின் உரிய பங்கு குறித்து முடிவு ஏற்படும் வகையில் நதி நீா் இணைப்புத் திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கைக்கு அனுமதி அளிக்கக்கூடாது என்று கா்நாடக அரசு தீா்மானம் நிறைவேற்றியிருப்பது உச்சநீதிமன்றத்தின் தீா்ப்புக்கு முற்றிலும் முரணான செயலாகும்.

ADVERTISEMENT

இந்த விவகாரத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் உடனடியாகத் தலையிட்டு, தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளாா் ஓ.பன்னீா்செல்வம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT