தமிழ்நாடு

இந்திய விடுதலைக்கு போராடிய வீரமங்கை அஞ்சலை பொன்னுசாமி அம்மாள் காலமானார்

2nd Jun 2022 01:11 PM

ADVERTISEMENT


நேதாஜி சுபாஸ் சந்திரபோஸின் இந்திய தேசிய ராணுவத்தில் இணைந்து, இந்தியாவின் விடுதலைக்காகப் போராடிய வீரமங்கை அஞ்சலை பொன்னுசாமி அம்மாள்(102) மலேசியாவில் காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

மலேசியாவின் கோலாலம்பூரில் பிறந்த அஞ்சலை பொன்னுசாமி அம்மா 1943 -ஆம் ஆண்டு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உருவாக்கிய இந்திய தேசிய ராணுவத்தில் (ஐ.என்.ஏ.) தன்னை இணைத்து கொண்டு நாட்டின் சுதந்திரத்துக்காக போராடியவர்.

இந்நிலையில், இந்தியாவின் விடுதலைக்காகப் போராடிய வீரமங்கை அஞ்சலை பொன்னுசாமி வயது மூப்பு காரணமாக மலேசியாவில் நேற்று புதன்கிழமை காலமானார்.

இதனையடுத்து, இந்தியாவின் விடுதலைக்காகப் போராடிய வீரமங்கை அஞ்சலை பொன்னுசாமி மறைவுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

1943 ஆம் ஆண்டு இரண்டாம் உலகப் போரின்போது நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உருவாக்கிய ‘இந்திய தேசிய இராணுவத்தில் (ஐ.என்.ஏ) ஜான்சி ராணி படைப்பிரிவில் இணைந்து இந்தியாவின் விடுதலைக்காகப் போராடிய வீரமங்கையான அஞ்சலை பொன்னுசாமி அம்மாள் (102) நேற்று மலேசியாவின் செந்துல் நகரில் காலமாகியுள்ளார். அவரது மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்தியாவில் பிறக்காவிட்டாலும் வாழாவிட்டாலும் 21 வயதே ஆன நிலையில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் படையில் சேர்ந்து கடும் நெருக்கடி மிகுந்த சூழல்களில் இந்தியாவின் விடுதலைக்காகப் போராடியவர் அஞ்சலை பொன்னுசாமி அம்மாள். இந்தியா,மலேசியா இரு நாடுகளும் முறையே 1947 மற்றும் 1957 ஆண்டுகளில் விடுதலை பெற்றதைக் கண்டு மகிழ்ந்து நிறைவாழ்வு வாழ்ந்தவர்  விடைபெற்றிருக்கிறார்.

வீரம், மனவுறுதி, துணிச்சல் ஆகிய பண்புகளால் பெண்குலத்துக்கே சிறந்ததோர் எடுத்துக்காட்டாக விளங்கிய அஞ்சலை பொன்னுசாமி அம்மாளின் தியாகம் இந்திய விடுதலை வரலாற்றில் என்றும் அழியாப்புகழ் பெற்று விளங்கும்”,என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT