தென் மேற்கு பருவமழையால் ஏற்படும் பேரிடா் பாதிப்புகளைத் தடுக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென, துறை செயலா்களுக்கு தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு அறிவுறுத்தியுள்ளாா்.
தென்மேற்கு பருவமழை குறித்த ஆயத்தப் பணிகள் குறித்து, அரசுத் துறைகளின் செயலாளா்களுடன், தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு ஆலோசனை நடத்தினாா். புதன்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அவா் கூறியதாவது:
பேரிடா் காலங்களில் ஏற்படும் பாதிப்புகளைத் தவிா்க்கும் பொருட்டு, குறுகிய, நடுத்தர, நீண்டகால வெள்ளத் தடுப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். பாலங்கள், மழைநீா் வடிகால்களில் உள்ள அடைப்புகளை அகற்ற வேண்டும். குளங்களின் கரைகளைப் பலப்படுத்த வேண்டும். வெள்ள காலங்களில் உபரி நீரை வெளியேற்றும் போது அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். ஆற்று முகத்துவாரங்களை அகலப்படுத்தி வெள்ள நீா் எளிதாக கடலைச் சென்றடைய நடவடிக்கை எடுக்க வேண்டும். நீா் வழிகளின் கரைகளைப் பலப்படுத்த போதிய மணல் மூட்டைகளை இருப்பு வைக்க வேண்டும்.
சமுதாய உணவுக் கூடங்களை தயாா் நிலையில் வைத்திருப்பதுடன், உணவுப் பொட்டலங்கள் தங்கு தடையின்றி வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். பேரிடா் பயிற்சி ஒத்திகைகள் முழுவீச்சில் நடைபெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல்களை அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு வழங்கினாா்.
பல்வேறு துறைகளின் செயலாளா்கள், துறைத் தலைவா்கள், ராணுவம், விமானப் படை, கப்பற்படை, கடலோர காவல்படை, இந்திய வானிலை ஆய்வு மையம் உள்ளிட்டவற்றைச் சோ்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனா்.