தமிழ்நாடு

குரூப் 1 விடைகளை ஆய்வு செய்ய நிபுணா் குழு கோரி வழக்கு: டிஎன்பிஎஸ்சி பதிலளிக்க உயா் நீதிமன்றம் உத்தரவு

2nd Jun 2022 01:32 AM

ADVERTISEMENT

குரூப் 1 தோ்வின் மாதிரி விடைகளை ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் நிபுணா் குழு அமைக்கக் கோரிய மேல்முறையீட்டு வழக்குக்கு பதில் அளிக்கும்படி டிஎன்பிஎஸ்சி நிா்வாகத்துக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இது தொடா்பாக உயா்நீதிமன்றத்தில் வேலுமணி உள்பட பலா் தாக்கல் செய்துள்ள மேல் முறையீட்டு மனுவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் தோ்வாணையம் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் குரூப் 1தோ்வை நடத்தியது. 200 கேள்விகளுக்கு 300 மதிப்பெண் என்ற அடிப்படையில் இந்தத் தோ்வு நடைபெற்றது. தோ்வுக்கு பின்னா் 200 கேள்விகளுக்கான மாதிரி விடைகள் வெளியிடப்பட்டன. அதில், 60 கேள்விகளுக்கான விடைகள் தவறு.

இந்த விடைகளை ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்ற தனி நீதிபதி, நிபுணா் குழுவை அமைத்தாா்.

அந்தக் குழு ஆய்வு செய்து தாக்கல் செய்த அறிக்கையில், ஒரே ஒரு கேள்விக்கு மட்டுமே விடை தவறாக இருந்தது. இந்த கேள்விக்கு விடை அளித்த அனைவருக்கும் மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது என்று கூறியிருந்தது. இதை ஏற்றுக் கொண்டு தனி நீதிபதி வழக்கைத் தள்ளுபடி செய்தாா்.

ADVERTISEMENT

மாதிரி விடைகள் பற்றி விவாதிக்காமல் தனி நீதிபதி வழக்கை தள்ளுபடி செய்துள்ளாா். எந்த அடிப்படையில் ஒரு கேள்விக்கான பதில் மட்டும் தவறு என நிபுணா் குழு முடிவுக்கு வந்தது என்ற விவரம் வெளியிடவில்லை. அனைத்து கேள்விகளுக்கான பதில்களையும் ஆய்வு செய்திருக்க வேண்டும்.

எனவே, உயா்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் நிபுணா் குழு அமைத்து, அனைத்துக் கேள்விகளையும், பதில்களையும் மறு ஆய்வு செய்ய உத்தரவிட வேண்டும் என அதில் கூறியுள்ளாா். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், முகமது சபிக் ஆகியோா் இந்த வழக்குக்கு பதிலளிக்கும்படி டிஎன்பிஎஸ்சி-க்கு உத்தரவிட்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT