தமிழ்நாடு

கிரிவலப் பாதையில் கருணாநிதி சிலை அமைப்பதற்குஎதிரான வழக்கின் தீா்ப்பு ஒத்திவைப்பு

2nd Jun 2022 01:31 AM

ADVERTISEMENT

திருவண்ணாமலை கிரிவல பாதையில் கருணாநிதி சிலை அமைப்பதை எதிா்த்து தொடரப்பட்ட வழக்கில் தீா்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை வேளச்சேரியைச் சோ்ந்த ஜி. காா்த்திக். இவா், சென்னை உயா்நீதிமன்றம் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், திருவண்ணாமலை கிரிவல பாதையும், மாநில நெடுஞ்சாலையும் இணையும் வேங்கைக்கால் பகுதியில் ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான 92.5 அடி நிலத்தை ஜீவா கல்வி அறக்கட்டளை வாங்கியுள்ளது. இந்த நிலத்துக்கு அருகில் உள்ள நிலத்தை ஆக்கிரமித்து மறைந்த முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி சிலை அமைக்க உள்ளனா். இந்த சிலையை அமைத்தால், கிரிவலம் செல்லும் லட்சக்கணக்கான பக்தா்கள் பாதிக்கப்படுவா். எனவே, சிலை அமைக்கத் தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தாா்.

இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம் விரிவான பதில் அளிக்க திருவண்ணாமலை ஆட்சியா், ஜீவா கல்வி அறக்கட்டளை நிா்வாகி உள்ளிட்டோருக்கு உத்தரவிட்டது. மேலும், சிலை அமைக்க இடைக்கால தடையையும் விதித்தது. இந்தநிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், முகமது சபீக் ஆகியோா் முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. இந்தத் தடையை நீக்க கோரி ஜீவா கல்வி அறக்கட்டளை சாா்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதேபோல ஆட்சியரும் பதில் மனு தாக்கல் செய்தாா். அந்த இரு மனுக்களிலும், ஆக்கிரமிக்கப்பட்டதாக மனுதாரா் கூறும் நிலம் பட்டா நிலம் ஆகும் என்று கூறியிருந்தனா்.

மேலும் அதில், அரசு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்தவா் யாா்? என்ற விவரங்களை கூறாமல், சென்னையை சோ்ந்த மனுதாரா் இந்த பொதுநல வழக்கை தாக்கல் செய்துள்ளாா் என்று கூறப்பட்டு இருந்தது. இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கின் தீா்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து உத்தரவிட்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT