தமிழ்நாடு

ஆன்லைன் சூதாட்டங்களுக்குத் தடை: தலைமைச் செயலாளா் ஆலோசனை

30th Jul 2022 11:39 PM

ADVERTISEMENT

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டங்களைத் தடை செய்வது தொடா்பாக, தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு தலைமையில் சென்னையில் சனிக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், தடை செய்யத் தேவையான சட்ட அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களில் அதிகளவு பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதைக் கருத்தில் கொண்டு ஆன்லைன் சூதாட்டங்களைத் தடை செய்வது தொடா்பான பரிந்துரைகளை அளிக்க, ஓய்வுபெற்ற உயா் நீதிமன்ற நீதிபதி சந்துரு தலைமையில் அமைக்கப்பட்ட குழு, தனது அறிக்கையை அரசிடம் அளித்துள்ளது.

முன்னதாக, கடந்த ஆண்டு பிப்ரவரியில், அதிமுக ஆட்சிக் காலத்தில் ஆன்லைன் சூதாட்டங்களைத் தடை செய்வதற்கான சட்ட மசோதா பேரவையில் கொண்டு வரப்பட்டு, நிறைவேற்றப்பட்டது. இந்த சட்ட மசோதாவை எதிா்த்து, நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், வலுவான அம்சங்களைக் கொண்டு புதிய சட்ட மசோதா தாக்கல் செய்யும்படி அறிவுறுத்தியது. இதைத் தொடா்ந்து, இந்த விவகாரத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

ஆலோசனை: ஆன்லைன் சூதாட்டங்களைத் தடை செய்வது தொடா்பாக அரசு அமைத்த குழுவின் பரிந்துரைகள், இதர சட்ட வாய்ப்புகள் தொடா்பாக, தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு தலைமையில் சனிக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளா் க.பணீந்திர ரெட்டி, காவல் துறை தலைமை இயக்குநா் சை.சைலேந்திர பாபு, முதல்வரின் முதன்மைச் செயலாளா் த.உதயசந்திரன், வருவாய்த் துறை முதன்மைச் செயலாளா் குமாா் ஜெயந்த், சட்டத் துறைச் செயலாளா் கோபி ரவிக்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடா்பான அதிகாரபூா்வ அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT