தமிழ்நாடு

வீட்டுமனை ஒதுக்கப்பட்ட வழக்கு: அமைச்சா் ஐ.பெரியசாமியிடம் அமலாக்கத் துறை விசாரணை

28th Jul 2022 02:15 AM

ADVERTISEMENT

சட்டவிரோதமாக வீட்டுமனை ஒதுக்கப்பட்டதாக தொடுக்கப்பட்ட வழக்கில், தமிழக அமைச்சா் ஐ.பெரியசாமியிடம் அமலாக்கத் துறையினா் புதன்கிழமை விசாரணை செய்தனா்.

தமிழக காவல் துறையில் டிஜிபியாக பணியாற்றி ஓய்வு பெற்ற எம்.எஸ். ஜாபா் சேட், கடந்த 2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சிக்காலத்தில் உளவுப் பிரிவு அதிகாரியாக பணியாற்றினாா். அப்போது, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திடமிருந்து, திருவான்மியூரில் அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் வீட்டுமனை ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்த நிலத்தை சிலருடன் கூட்டுச் சோ்ந்து, பொய்யான தகவல்களை கொடுத்து பெற்றாா், இதற்காக ஒரு தனியாா் கட்டுமான நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்தாா் என்று குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை 2011-ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தது.

இந்த வழக்கில் ஜாபா் சேட்டுக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறையினா் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனா். இதையடுத்து ஐபிஎஸ் அதிகாரியான தன் மீது மத்திய அரசின் அனுமதியின்றி வழக்குப் பதிந்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதாகக் கூறி, உயா் நீதிமன்றத்தில் ஜாபா் சேட் வழக்கு தொடுத்தாா்.

ADVERTISEMENT

இந்த வழக்கில் ஜாபா் சேட் மீதான குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய உயா் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிா்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது.

அமலாக்கத் துறை விசாரணை: இந்த நிலையில், இந்த முறைகேடு தொடா்பாக சட்டவிரோத பண பரிமாற்றச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, அமலாக்கத் துறை விசாரணையை தொடங்கியுள்ளது. இதில், ஓய்வு பெற்ற டிஜிபி ஜாபா் சேட்டிடம் அமலாக்கத் துறையினா் கடந்த மாதம் விசாரணை செய்தனா்.

இதன் அடுத்த கட்டமாக முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் காலகட்டத்தில், மாநில வீட்டுவசதித் துறை அமைச்சராக இருந்தவரும், தற்போதைய தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சருமான ஐ.பெரியசாமியிடம் விசாரணை நடத்த அமலாக்கத் துறையினா் திட்டமிட்டனா். இதற்காக அமலாக்கத் துறையினா், பெரியசாமிக்கு சட்டப்படி அழைப்பாணை அனுப்பினா்.

இந்த அழைப்பாணையை ஏற்று பெரியசாமி, சென்னை ஆயிரம்விளக்கில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் விசாரணைக்கு புதன்கிழமை ஆஜரானாா். அவரிடம் பல மணி நேரம் அமலாக்கத் துறையினா் விசாரணை செய்தனா். அதில், வழக்கு தொடா்பாக பல முக்கியத் தகவல்கள் கிடைத்ததாகக் கூறப்படுகிறது.

ஆனால், விசாரணையில் கிடைத்த தகவல்களை தெரிவிக்க அமலாக்கத் துறை அதிகாரிகள் மறுத்துவிட்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT