தமிழ்நாடு

பாஜக தலைவர் அண்ணாமலைக்கு நீதிபதி பாராட்டு

28th Jul 2022 03:45 AM

ADVERTISEMENT

கடவுச்சீட்டு மோசடியை வெளிப்படுத்தியதற்காக மாநில பாஜக தலைவர் கே.அண்ணாமலைக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
 கடவுச்சீட்டு புதுப்பித்தலுக்கான விண்ணப்பத்தை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி மதுரையைச் சேர்ந்த சுரேஷ்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு: மதுரை மற்றும் திருச்சியில் போலி ஆவணங்களைப் பயன்படுத்தி இந்தியா, இலங்கையைச் சேர்ந்தவர்களுக்கு முறைகேடாக இந்திய கடவுச்சீட்டு பெறப்பட்டுள்ளது.
 இதுதொடர்பாக பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்கும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையிலும் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் விசாரணையை 6 மாதத்திற்குள் முடிக்க உயர்நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டபோதும், அதை கியூ பிரிவு போலீஸார் பின்பற்றவில்லை.
 இப்பிரச்னை குறித்து பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை தற்போது கேள்வி எழுப்பியிருக்கிறார்.
 இந்த வழக்கு தொடர்பாக, கியூ பிரிவு போலீஸார் தாக்கல் செய்துள்ள நிலை அறிக்கையில், 41 பேர் மீது வழக்குத் தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் மதுரை மண்டல கடவுச்சீட்டு அலுவலக அதிகாரிகள், மாநில காவல் துறை அதிகாரிகள் அடங்குவர்.
 மத்திய அரசு அதிகாரிகள் 13 பேரிடம் விசாரிக்க அனுமதி கோரியதில், ஒருவரிடம் விசாரணை நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. மாநகரக் காவல் நுண்ணறிவுப் பிரிவு உதவி ஆணையர் சிவக்குமாரிடம் விசாரணை நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஒரு ஆய்வாளர், 3 தலைமைக் காவலர்கள் விசாரிக்கப்பட உள்ளனர். இந்த வழக்கின் இறுதி அறிக்கை விரைவில் மதுரை நீதித்துறை நடுவர் மன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது.
 சம்பந்தப்பட்ட நடுவர், இந்த வழக்கில் விரைவில் விசாரணை மேற்கொள்ள வேண்டும்.
 இந்த வழக்கு தேசிய பாதுகாப்பு மீது தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மதுரையில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் நிகழ்ந்துள்ள மோசடியானது, 54 கடவுச் சீட்டுகள் முறைகேடாக வழங்குவதற்கு வழிவகுத்துள்ளது. இந்த ஊழலில் ஈடுபட்டவர்கள் மீது விரைவில் வழக்குத் தொடருவது அவசியம்.
 கள விசாரணை செய்யக்கூடிய தலைமைக் காவலர் முதல் காவல் உயர் அதிகாரி வரை பல கட்டங்களாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு, அறிக்கை சமர்ப்பிக்கப்படுகிறது. மாநகரக் காவல் ஆணையர்கள், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்கள் ஒவ்வொரு மாதமும் வழங்கப்பட்ட கடவுச்சீட்டு குறித்து சீராய்வு மேற்கொள்வது வழக்கம். இந்த முறைகேடு நிகழ்ந்த காலத்தில், மதுரை மாநகரக் காவல் ஆணையராக எஸ்.டேவிட்சன் தேவாசீர்வாதம் இருந்தார். இருப்பினும் அவருக்கு எவ்வித தொடர்பும் இல்லை.
 கடவுச்சீட்டு ஒருங்கிணைப்பு அதிகாரிகளாக இருக்கும் டிஎஸ்பி மற்றும் உதவிஆணையர் நிலையிலேயே விசாரணை அறிக்கை நடைமுறைகள் முடிந்துவிடுகிறது.
 நீதிமன்றத்தில் சிபிஐ விசாரணை கோருவதற்கு முன்பே இந்த வழக்கு தொடர்பாக, உரிய காலத்தில் விசாரணையை முடித்திருந்தால் தற்போது சர்ச்சைகள் எழ வாய்ப்பு இருந்திருக்காது. இப்பிரச்னையை முன்னெடுத்ததற்காக மாநில பாஜக தலைவர் கே.அண்ணாமலைக்கு பாராட்டுத் தெரிவிக்கப்படுகிறது. அவர் கேள்வி எழுப்பாமல் இருந்திருந்தால், இப் பிரச்னை வெளிச்சத்திற்கு வந்திருக்காது.
 
 

Tags : bjp annamalai
ADVERTISEMENT
ADVERTISEMENT