அகில இந்திய காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தியிடம் அமலாக்கத் துறையினா் விசாரணை நடத்தியதற்கு எதிா்ப்பு தெரிவித்து, தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியினா் புதன்கிழமையும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தில்லியில் சோனியாகாந்தியிடம் அமலாக்கத் துறையினா் 3-ஆவது நாளாக புதன்கிழமை விசாரணை மேற்கொண்டனா். இதற்கு எதிா்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினா் போராட்டத்தில் ஈடுபட்டனா். தமிழகத்திலும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்றது.
வடசென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில் ராயபுரம் பெரியபாளையம்மன் கோயில் அருகில் மாவட்டத் தலைவா் எம்.எஸ்.திரவியம் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. 100-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். திடீரென அவா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். அவா்களை காவல் துறையினா் கைது செய்து, பின்னா் விடுவித்தனா்.
சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் சிவ.ராஜசேகரன் தலைமையில் சூளைமேடு காந்தி சிலை அருகில் போராட்டம் நடைபெற்றது.