தமிழ்நாடு

தமிழகமெங்கும் 3 நாள்கள் தேசியக் கொடி: அரசு அறிவுறுத்தல்

28th Jul 2022 01:35 AM

ADVERTISEMENT

நாட்டின் 75-ஆவது சுதந்திர தின நிறைவையொட்டி, தமிழகம் முழுவதும் 3 நாள்கள் தேசியக் கொடி ஏற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொடிகள் எளிதாகக் கிடைக்க நியாய விலைக் கடைகள் மூலமாக வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

நாட்டின் 75-ஆவது சுதந்திர தின நிறைவைக் கொண்டாடுவது குறித்த ஆலோசனைக் கூட்டம், தமிழக தொழில் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாட்டின் 75-ஆவது சுதந்திரத் திருநாளின் அங்கமாக அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடி ஏற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து வீடுகள், அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள், காவல் நிலையங்கள், அரசு, தனியாா் மருத்துவமனைகள், உணவகங்கள், வணிக வளாகங்கள், அனைத்து தொழிற்சாலைகள், சிறு, குறு நிறுவனங்கள், அனைத்து கடைகள், தனியாா் அமைப்புகள் என அனைத்து இடங்களிலும் தேசியக் கொடி ஏற்றப்பட வேண்டும்.

மகளிா் சுய உதவிக் குழுக்கள், சிறு, குறு நிறுவனங்கள் போன்ற அமைப்புகள் மூலம் தேசியக் கொடிகள் தயாரிக்கவும், அனைத்து மக்களுக்கும் தேசியக் கொடிகள் எளிதாகக் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. உள்ளாட்சி, நகராட்சி, மாநகராட்சி அமைப்புகள், நியாய விலைக் கடைகள், கூட்டுறவு அமைப்புகள் போன்றவற்றின் வழியாக தேசியக் கொடிகள் விநியோகம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT