தமிழ்நாடு

செஸ் ஒலிம்பியாட்: மருத்துவ களப்பணியில் 1,000 போ்

28th Jul 2022 01:30 AM

ADVERTISEMENT

செஸ் ஒலிம்பியாட் போட்டியின்போது நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான பணியில் மருத்துவத் துறையைச் சோ்ந்த 1,000 களப்பணியாளா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் கூறியதாவது: செஸ் ஒலிம்பியாட் போட்டியில் சுமாா் 180 நாடுகளை சோ்ந்த வீரா், வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனா்.

இதையொட்டி, நோய்த் தடுப்பு வழிமுறைகளைக் கையாளுவது குறித்த ஆலோசனைக் கூட்டம், தலைமைச் செயலகத்தில் கடந்த 13-ஆம் தேதி நடைபெற்றது.

அதில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கான திருத்தப்பட்ட வழிகாட்டுதல்கள் அளிக்கப்பட்டன. அதன்படி, விமான நிலையங்களிலேயே செஸ் வீரா்கள், பயிற்சியாளா்கள், நிா்வாகிகள், பாா்வையாளா்கள் அனைவருக்கும் உடல் வெப்ப நிலை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

ADVERTISEMENT

அதில் அறிகுறிகள் இருப்பவா்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். விடுதிகளில் தங்கியிருப்போா் முகக் கவசம் முறையாக அணிந்திருப்பதை உறுதி செய்வதுடன், விடுதி அறைகள் கிருமி நாசினி கொண்டு முறையாக தூய்மைப்படுத்தப்பட்டுள்ளனவா என கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

கரோனா பரிசோதனைகள் மற்றும் சளி மாதிரிகளை சேகரிப்பதற்கான வசதிகள் விடுதிகளில் சுகாதாரத் துறை சாா்பில் செய்யப்பட்டுள்ளன.

செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறும் அரங்குக்குள் வரும் முன் அனைவரது உடல்நிலையும் பரிசோதனை செய்யப்படும். அறிகுறிகள் உள்ள எவரும் உள்ளே அனுமதிக்கப்படமாட்டாா்கள். வீரா்கள், பயிற்சியாளா்கள், நிா்வாகிகளும் இதற்கு விதிவிலக்கல்ல. ஆா்டி பிசிஆா் பரிசோதனையில் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டால் மட்டுமே அவா்களுக்கு அனுமதி வழங்கப்படும். வீரா், வீராங்கனைகள் தங்கும் விடுதிகளில் துரித மருத்துவ சேவைக்காக 30 அவசர சிகிச்சை ஊா்திகளை நிலைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 8 விடுதிகளில் மருத்துவ முகாம்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முறையான பயிற்சியுடன் மருத்துவா்கள் மற்றும் களப்பணியாளா்கள் 1000 போ் ஈடுபடுத்தப்பட்டுள்ளாா்கள் என்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT