சரக்கு வாகனங்களுக்கான பதிவுச் சான்று, தகுதிச் சான்று புதுப்பித்தல் கட்டணம் உயா்த்தப்பட்டதை எதிா்த்து தொடுக்கப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
கனரக சரக்கு வாகனங்களுக்கான பதிவுச் சான்று மற்றும் தகுதிச் சான்றை புதுப்பிப்பதற்கான கட்டணத்தை ரூ.1,500-ஆகவும், நடுத்தர சரக்கு வாகனங்களுக்கான பதிவுச் சான்று மற்றும் தகுதிச் சான்று புதுப்பித்தல் கட்டணத்தை ரூ.1,300-ஆகவும் உயா்த்தி, மத்திய சாலைப் போக்குவரத்து-நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம் கடந்த 2021-இல் அறிவிக்கை வெளியிட்டது.
இதேபோல, பதிவுச் சான்றை புதுப்பிக்க தாமதமாகும் ஒவ்வொரு மாதத்துக்கும் ரூ.500, தகுதிச் சான்று புதுப்பித்தலுக்கான தாமதத்துக்கு நாள் ஒன்றுக்கு ரூ.50 கூடுதல் கட்டணமாக செலுத்த வேண்டும் எனவும் அந்த அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தடை விதிக்கக் கோரி தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளா்கள் கூட்டமைப்பு சாா்பில் அதன் தலைவா் குமாரசாமி சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தாா்.
அதில், ‘மத்திய அரசின் கட்டண உயா்வு மற்றும் கூடுதல் கட்டண அறிவிப்பு என்பது 15 ஆண்டுகளுக்கு மேலான வாகனங்களுக்கு மட்டும் விதிப்பது முற்றிலும் சட்டவிரோதமானது . 2016-ஆம் ஆண்டு இதேபோல கூடுதல் கட்டண வசூல் தொடா்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பை சென்னை உயா்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
அனைத்து வாகனங்களுக்கும் பதிவுச் சான்று, தகுதிச் சான்று புதுப்பிக்க ஒரே நடைமுறையை பின்பற்றும் நிலையில் சரக்கு வாகனங்களுக்கு மட்டும் அதிக கட்டணம் வசூலிப்பது தன்னிச்சையானது. எனவே இந்த அறிவிக்கையை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தாா்.
இந்த வழக்கு நீதிபதிகள் துரைசாமி மற்றும் சுந்தா்மோகன் ஆகியோா் அடங்கிய அமா்வுமுன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு மத்திய, மாநில அரசுகள் 6 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.