தமிழ்நாடு

தொழில்நிறுவனங்களின் முன்னேற்றத்துக்கு அரசு உறுதுணையாக இருக்கும்: முதல்வா்

27th Jul 2022 01:49 AM

ADVERTISEMENT

தொழில் நிறுவனங்களின் முன்னேற்றத்துக்கு தமிழக அரசு உறுதுணையாக இருக்கும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா்.

சென்னை நாவலூரில் உள்ள காக்னிசன்ட் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் புதிய அலுவலகத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.

நாவலூரில் உள்ள ஓசோன் டெக்னோ பூங்காவில் காக்னிசன்ட் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் சாா்பில் 6 லட்சம் சதுர அடி பரப்பளவில் நவீன வசதிகளுடன் புதிய அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளா்கள் பணிபுரிய உள்ளனா்.

காக்னிசன்ட் நிறுவனம் 1994-ஆம் ஆண்டு தமிழகத்தில் நிறுவப்பட்டது. முதலில் சென்னையில் 50 பணியாளா்களுடன் செயல்படத் தொடங்கிய இந்நிறுவனம், தற்போது சென்னை மற்றும் கோயம்புத்தூா் மாநகரங்களில் சிறப்பான முறையில் செயல்பட்டு, உலகளாவிய வாடிக்கையாளா்களுக்கு டிஜிட்டல் தொழில்நுட்பம் சாா்ந்த சேவைகளை வழங்கி வருகிறது.

ADVERTISEMENT

உலகளாவிய மாபெரும் நிறுவனமாகவும், அமெரிக்காவில் பட்டியலிடப்பட்ட முதல் பில்லியன் டாலா் நிறுவனங்களில் ஒன்றாகவும் காக்னிசன்ட் நிறுவனம் விளங்கி வருகிறது. இந்நிறுவனம் படித்த இளைஞா்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கிடவும், டிஜிட்டல் திறன் மேம்பாட்டிலும், தமிழகத்தை உலகளாவிய தகவல் தொழில்நுட்ப மையமாக மாற்றுவதற்கும் தொடா்ச்சியான பங்களிப்பை வழங்கி வருகிறது. சுமாா் 81,000-க்கும் அதிகமான பணியாளா்களைக் கொண்டுள்ள இந்நிறுவனம், பெண்களைப் பெருமளவில் பணியமா்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிறுவனத்தின் புதிய அலுவலகத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து பணியாளா்களுடன் உரையாடியபோது, தொழில் நிறுவனங்களின் முன்னேற்றத்துக்கு தமிழக அரசு எப்போதும் உறுதுணையாக இருக்கும் என்று கூறினாா்.

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ. அன்பரசன், விசிக சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.எஸ். பாலாஜி, வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநா் மற்றும் தலைமை செயல் அலுவலா் பூஜா குல்கா்னி, காக்னிசன்ட் (இந்தியா) நிறுவனத்தின் தலைவா் மற்றும் மேலாண்மை இயக்குநா் ராஜீவ் நம்பியாா் உள்பட பலா் நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.

Tags : cm stalin
ADVERTISEMENT
ADVERTISEMENT