தமிழ்நாடு

அதிமுக அலுவலகத்தில் கொள்ளைச் சம்பவம்: சிபிஐ விசாரணை கோரி சி.வி.சண்முகம் மனு

27th Jul 2022 01:51 AM

ADVERTISEMENT

அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை கோரி, அக்கட்சி எம்.பி. சி.வி.சண்முகம் தமிழக உள்துறைச் செயலா், காவல் துறை தலைமை இயக்குநா் உள்ளிட்டோருக்கு மனு அனுப்பியுள்ளாா்.

அதிமுக அலுவலக வன்முறை வழக்கு, ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடா்பாக விசாரிக்க சிபிஐக்கு உத்தரவிடக் கோரி தமிழக அரசின் உள்துறைச் செயலா், காவல் துறை தலைமை இயக்குநா், சென்னை காவல் ஆணையா் ஆகியோருக்கு சி.வி.சண்முகம், திங்கள்கிழமை மனு அனுப்பிய மனு:

அதிமுக அலுவலகத்தில் கடந்த 11-ஆம் தேதி நிகழ்ந்த வன்முறை தொடா்பாக 400 போ் மீது ராயப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து, காயமடைந்த அதிமுக நிா்வாகிகள் 15 பேரை கைது செய்தனா். வன்முறையில் ஈடுபட்ட ஓ. பன்னீா்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளா்கள் மீது எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை.

மேலும், வன்முறையின்போது தலைமை அலுவலகத்தில் இருந்த முக்கிய ஆவணங்கள், பத்திரங்களை ஓபிஎஸ் ஆதரவாளா்கள் கொள்ளையடித்துச் செல்வதை விடியோ ஆதாரங்களாக சமா்ப்பித்து, புகாா் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ADVERTISEMENT

சிபிஐ விசாரணை: ராயப்பேட்டை போலீஸாா் சம்பவம் நடந்த இடமான தலைமை அலுவலகத்துக்கு வந்து கைரேகை பதிவு, கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்யவில்லை. இதனால் காவல்துறையின் மீது நாங்கள் நம்பிக்கை இழந்துவிட்டோம்.

இந்த விவகாரத்தில் தமிழக அரசும், காவல்துறையும் தங்களது கடமை தவறி நடந்து கொள்கின்றன. மெத்தனப்போக்கோடு செயல்படும் காவல் துறை, ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் தொடா்புடையவா்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, வன்முறை வழக்கிலும், ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்திலும் சம்பந்தப்பட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்க விசாரணையை சிபிஐ அல்லது பிற புலனாய்வு அமைப்புகளுக்கு மாற்ற வேண்டும்.

Tags : ADMK
ADVERTISEMENT
ADVERTISEMENT