தமிழ்நாடு

மாணவியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைப்பு: அமைச்சர் கணேசன், எம்எல்ஏக்கள் அஞ்சலி

23rd Jul 2022 08:08 AM

ADVERTISEMENT

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூர் தனியார் பள்ளியில் உயிரிழந்த மாணவி ஸ்ரீமதியின் உடல் அவரது பெற்றோரிடம் இன்று ஒப்படைக்கப்பட்டது. 

கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த பெரிய நெசலூர் கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம் மகள் ஸ்ரீமதி (17), கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூர் தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தநிலையில் கடந்த 13 ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார்.

மாணவி உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி மாணவியின் உடலை வாங்க பெற்றோர் மறுத்தனர். இதனால் கடந்த 10 நாள்களாக மாணவியின் உடல் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் உயர்நீதிமன்றத்தின் அறிவுறுத்தலைத் தொடர்ந்து மாணவியின் உடலைப் பெற்றுக்கொள்ள பெற்றோர் முன்வந்தனர். இதனையொட்டி வெள்ளிக்கிழமை இரவு முதல் கள்ளக்குறிச்சி மருத்துவமனை முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.

ADVERTISEMENT

சனிக்கிழமை காலை 6.45 மணி அளவில் தொழிலாளர்கள் நலத் துறை அமைச்சர் சி.வி.கணேசன், எம்எல்ஏக்கள் வசந்தம் கார்த்திகேயன், உதயசூரியன் முன்னிலையில் மாணவியின் உடலை அவரது பெற்றோர் பெற்றுக்கொண்டனர். மேலும், அமைச்சர் கணேசன், எம்எல்ஏக்கள், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் மாணவியின் உடலுக்கு மாலை அணிவித்து இறுதி அஞ்சலி செலுத்தினர்.

பின்னர், அவசர ஊர்தி மூலமாக மாணவியின் உடல், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள மாணவியின் சொந்த ஊரான பெரிய நெசலூர் கிராமத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது.

மாணவி ஸ்ரீமதி மர்ம மரணம் தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் இது வரை பள்ளி தாளாளர் ரவிக்குமார், பள்ளி செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன் மற்று இரண்டு ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க | கள்ளக்குறிச்சி மாணவிக்கு இன்று இறுதிச் சடங்கு: உடலைப் பெற பெற்றோா் ஒப்புதல்

ADVERTISEMENT
ADVERTISEMENT