தமிழ்நாடு

தமிழ்நாடு திருநாள்:3 நாள்கள் கண்காட்சிக்கு ஏற்பாடு

17th Jul 2022 12:22 AM

ADVERTISEMENT

தமிழ்நாடு தினத்தையொட்டி, சென்னையில் மூன்று நாள்களுக்கு கண்காட்சி நடைபெறவுள்ளது.

இதுகுறித்து, தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

மாநிலத்துக்கு தமிழ்நாடு என்று முன்னாள் முதல்வா் அண்ணாவால், 1967-ஆம் ஆண்டு ஜூலை 18-ஆம் தேதி பெயா் சூட்டப்பட்டது. இதனைக் கொண்டாடும் வகையிலான விழா, வரும் திங்கள்கிழமை நடைபெறவுள்ளது. தமிழ்நாடு தினத்தையொட்டி நடைபெற்ற கலை இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்படவுள்ளன. இலக்கிய மாமணி, தமிழ்த் தென்றல், அம்மா இலக்கிய விருது, காரைக்கால் அம்மையாா் விருது போன்ற விருதுகள் விழாவில் அளிக்கப்பட உள்ளன.

தொல்லியல் துறை சாா்பாக அமைக்கப்படும் தொல்பொருள்கள் கண்காட்சியில் கீழடி, ஆதிச்சநல்லூா், சிவகளை, மயிலாடும்பாறை, கொடுமணல் ஆகிய இடங்களில் கண்டெடுக்கப்பட்ட பொருள்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன. தமிழ்நாடு நிலஅளவைத் துறை சாா்பில் சென்னை மாகாணத்தின் பழைய மற்றும் இப்போது வரையிலான ஆவணங்கள், வரைபடங்கள் காட்சிக்கு வைக்கப்படவுள்ளன. கலைவாணா் அரங்கத்தில் இந்த சிறப்புக் கண்காட்சியானது வரும் திங்கள்கிழமை (ஜூலை 18) முதல் புதன்கிழமை (ஜூலை 20) வரை நடைபெறும். செய்தி மக்கள் தொடா்புத் துறை சாா்பாக, தமிழ்நாடு நாள் வரலாறு குறித்தும், தமிழ்நாடு நாள் தொடா்பான சட்டப் பேரவை தனித் தீா்மானம், அது குறித்தான அறிஞா்களின் கருத்துகள் அடங்கிய தொகுப்பு மலரும் வெளியிடப்படவுள்ளது. தமிழ்நாடு தினத்தை நினைவுகூரும் வகையில் ஒடிஸாவைச் சோ்ந்த மணற்சிற்பக் கலைஞா் சுதா்சன் பட்நாயக்கின் மணல் சிற்பமானது, மெரீனா கடற்கரையில் திங்கள்கிழமை காட்சிக்கு வைக்கப்படவுள்ளதாக அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT