தமிழ்நாடு

சமையல் எரிவாயு விலை உயர்வை எதிர்த்து அண்ணாமலை போராடுவாரா? - வைகோ கேள்வி

7th Jul 2022 01:04 PM

ADVERTISEMENT


சென்னை: சமையல் எரிவாயு விலையையும் உயர்த்தி மக்கள் வயிற்றில் அடிப்பதை பாஜக அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை எதிர்த்து அண்ணாமலை போராடுவாரா? என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கேள்வி எழுப்பியுள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''பெட்ரோல், டீசல் விலையை பன்னாட்டு கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப நாள்தோறும் நிர்ணயிக்கப்படுவதைப் போல, சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை மாதந்தோறும் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது.

கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி, வீட்டு உபயோக சமையல் எரிவாயு 14.2 கிலோ சிலிண்டரின் விலை ரூ.710 ஆக இருந்தது. தொடர்ச்சியாக விலை உயர்த்தப்பட்டு, கடந்த மே மாதம் ரூ. 1018.50 ஆக இருந்து வந்தது. 

இந்நிலையில், புதன்கிழமை சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை ரூ.1068.50 ஆக மத்தியில் ஆளும் பாஜக அரசு உயர்த்தி இருக்கிறது. கடந்த 19 மாதங்களில் சமையல் எரிவாயு உருளை ரூ.358.50. அதாவது 50.44 விழுக்காடு அதிகரித்து இருக்கிறது.

ADVERTISEMENT

இந்த விலை உயர்வுக்கு பன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வும், இந்திய ரூபாய் மதிப்புச் சரிவும் காரணம் என்று மத்திய அரசு கூறுவதை ஏற்க முடியாது. 2014 மே மாதம், மோடி தலைமையிலான பாஜக அரசு பொறுப்பேற்ற போது, சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.410.50 ஆக இருந்தது. பாஜக ஆட்சியில் கடந்த 8 ஆண்டுகளில் ரூ.658 அதிகரித்து, தற்போது சமையல் எரிவாயு விலை ரூ.1068.50 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது.

2014 ஆம் ஆண்டு பன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 100 டாலர். தற்போது ஜூலை 6 ஆண் தேதி ஒரே நாளில் கச்சா எண்ணெய் விலை 113.50 டாலரிலிருந்து 102 டாலராக வீழ்ச்சி அடைந்து இருக்கிறது. 2014 ஆம் ஆண்டில் இருந்த அளவுக்குத்தான் பன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை 2022 ஜூலை மாதமும் இருக்கிறது. 

இதையும் படிக்க | இயற்கை விவசாயம், பாரம்பரிய நெல்லுக்கு விழிப்புணர்வு: வயலில் திருவள்ளுவர் திருவுருத்தில் நடவு செய்த விவசாயி 

இந்நிலையில், சமையல் எரிவாயு விலையை உருளை ஒன்றுக்கு ரூ.410 ஆக நிர்ணயம் செய்ய வேண்டும்.

ஆனால், தொடர்ச்சியாக மக்களை வாட்டி, வஞ்சித்து வரும் மோடி அரசு, சமையல் எரிவாயு விலையை ரூ.1068.50 ஆக அதிகரித்து, மக்கள் மீது சுமையை ஏற்றிக்கொண்டே வருவது கண்டனத்திற்குரியது. 

சமையல் எரிவாயு மானியத்தை மக்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கிறோம் என்று மோசடியான திட்டத்தைச் செயல்படுத்திய மத்திய அரசு, மானியத்தை ரூ. 300லிருந்து தற்போது வெறும் ரூ.24 ஆக குறைந்துவிட்டது.

தாங்க முடியாத விலைவாசி உயர்வால் மக்கள் அல்லல்படும் நிலையில், சமையல் எரிவாயு விலையையும் தொடர்ந்து உயர்த்தி, மக்கள் வயிற்றில் அடிப்பதை பாஜக அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும்.

மேலும், எதெற்கெடுத்தாலும் போராட்டம் நடத்தும் தமிழக பாஜக தலைவர், சமையல் எரிவாயு விலையை தொடர்ச்சியாக உயர்த்தி வரும் மத்திய அரசை எதிர்த்துப் போராடுவாரா? என்று கேள்வி எழுப்பியுள்ள வைகோ, சமையல் எரிவாயு உருளையின் மானியத்தை அதிகரிக்க வேண்டும்; விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT